திண்டுக்கல்லில் மத்திய அரசை கண்டித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், அக். 17: மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல்லில் இடதுசாரி கட்சிகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி விதிப்பு, பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை மக்கள் மீது திணித்து வரும் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சிகள் சார்பில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகில் இடதுசாரி கட்சிகள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மதுரை எம்பி வெங்கடேசன் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில், ரிசர்வ் வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை பொது முதலீட்டு திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பை அதிகரிக்க பொது முதலீட்டை அதிகரிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.18,000 ஆக உயர்த்திட உத்தரவாதம் அளிக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்ப்பது நிறுத்தி கொள்ள வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தை 200 நாட்கள் ஆக அதிகரிக்க வேண்டும். விவசாயிகளின் நெருக்கடிகளை களைந்து அவர்கள் பெற்றிருக்கின்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விதவை, முதியோர் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக அதிகரிக்க செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், சிபிஐ மாவட்ட செயலாளர் மணிகண்டன், சிபிஎம்எல் மாவட்ட நிர்வாகி மணிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: