உரிமம் இன்றி இனிப்பு, காரம் விற்றால் கடும் நடவடிக்கை

சேலம், அக்.17: தீபாவளி பண்டிகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் உரிமம் இன்றி இனிப்பு மற்றும் காரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. உணவு பாதுகாப்புதுறையினரிடம் உரிமம் பெற்று இனிப்பு, கார வகைகளை விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் கூறியதாவது:தீபாவளி பண்டிகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பலகார சீட்டுகள் நடத்தி மக்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை வசூல் செய்து, இனிப்பு மற்றும் கார வகைகள் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். இந்த இனிப்பு, கார வகைகளை வீட்டிலோ அல்லது திருமண மண்டபத்திலோ வைத்து மொத்தமாக தயார் செய்து கொடுக்கின்றனர். அப்படி செய்யப்படும் பண்டங்கள் தரமானதாகவும், கலப்படம் இல்லாததாகவும் இருக்க வேண்டும். வண்ணங்கள் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் இருக்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக பண்டிகை காலங்களில் பலகாரம் செய்பவர்கள் கண்டிப்பாக உணவு பாதுகாப்பு தறையில் வழங்கப்படும் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் அவசியம் பெற வேண்டும். உரிமம் இல்லாமல் பண்டிகை கால இனிப்பு, கார வகைகள் தயார் செய்தால் அவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கதிரவன் கூறினார்.

Advertising
Advertising

Related Stories: