×

மாணவர்கள் மீது மோதி விட்டு மின்னல் வேகத்தில் காரை ஓட்டி வந்த வாலிபரை சினிமா பாணியில் மடக்கி பிடித்த போலீசார்

காடையாடம்பட்டி, அக்.17: மாணவர்கள் மீது மோதி விட்டு மின்னல் வேகத்தில் காரை ஓட்டி வந்த பென்னாகரம் வாலிபரை சினிமா  பாணியில் தீவட்டிப்பட்டி போலீசார் மடக்கி பிடித்தனர்.ஈரோடு பகுதியில் இருந்து நேற்று மாலை சங்ககிரி, கொங்கணாபுரம், தாரமங்கலம் வழியாக ஒரு கார் மின்னல் வேகத்தில் வந்துள்ளது. தாரமங்கலம் அருகே துட்டம்பட்டி பகுதியில் வரும்போது அந்த பகுதியில் பள்ளி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 2 மாணவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.  இதனைக்கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் டூவீலர்களில் துரத்திச்சென்றனர். ஆனால், அந்த கார் நிற்காமல் சென்றது. வழியில் மேலும் பல வாகனங்கள் மீது மோதியவாறு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில், தீவட்டிப்பட்டி போலீசார் காவல்நிலையம் முன் தடுப்பு ஏற்படுத்தி சேலம்- பெங்களூரு சாலையில் வாகன தணிக்கையை முடுக்கி விட்டனர். இதற்காக அப்பகுதியில் சுமார் 200 மீ., தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்த நிலையில், குறிப்பிட்ட அந்த கார் சாலையோரம் புதர் பகுதியை கடந்தவாறு மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சிக்குள்ளாகினர். உடனே, மற்ற வாகனங்களை குறுக்கே நிறுத்தியவாறு அந்த காரை மடக்கி பிடித்தனர்.

பின்னர், காரில் இருந்தவரிடம் நடத்திய விசாரணையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சோமம்பட்டி பகுதியைச்சேர்ந்த சின்ராஜ் மகன் கோகுல்ராஜ்(25) என்பது தெரிய வந்தது. ஈரோட்டில் கேட்டரிங் நடத்தி வரும் அவர், மதுபோதையில் காரை ஓட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சமயத்தில் சுமார் 20 கி.மீ., தொலைவிற்கு டூவீலர்களில் காரை துரத்தி வந்தவர்களும் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தனர். விசாரணையின்போது, “காருக்கு இன்சூரன்ஸ் உள்ளது. யார் பாதிக்கப்பட்டாலும் இன்சூரன்ஸ் பெற்றுக்கொள்ளலாம்” என கூறியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோகுல்ராஜை அடிப்பதற்காக பாய்ந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தி அனுப்பினர். தொடர்ந்து மது போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிந்து மாணவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்ட வாலிபரை தாரமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். \

Tags : policeman ,
× RELATED டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது...