×

33 ஆட்டுக்குட்டிகள் மர்ம சாவு செட்டிகுளத்தில் கால்நடை அதிகாரிகள் ஆய்வு

கடையம், அக். 17: ஆழ்வார்குறிச்சி அருகே 33 ஆட்டுக் குட்டிகள் மர்மமாக இறந்த நிலையில், அப்பகுதியில் நேற்று கால்நடை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செட்டிகுளம் வஉசி நகரைச் சேர்ந்தவர் பரமசிவன் (60). விவசாயியான இவர், 100க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த ஆடுகளை அச்சன்குளம் பகுதியில்  மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். நேற்று  முன்தினம் 33 ஆட்டுக்குட்டிகளை சுடலை மாடசுவாமி கோயில் அருகே பட்டியில் அடைத்து விட்டு மற்ற ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார்.
மாலையில் வந்து பார்த்தபோது பட்டியில் இருந்த 33 ஆட்டுக்குட்டிகளும் இறந்து கிடந்தன. தகவலறிந்து ஆழ்வார்குறிச்சி எஸ்ஐ காஜாமுகைதீன், தனிப்பிரிவு ஏட்டு முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.  நேற்று நெல்லை  கால்நடை துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் ரோஜர், நோய் புலனாய்வு பிரிவு டாக்டர் ஜான்சுபாஷ், அம்பை  கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர் ஆபிரகாம், நோய் புலனாய்வு பிரிவு கால்நடை உதவி மருத்துவர் பொன்மணி, ஆழ்வார்குறிச்சி கால்நடை உதவி மருத்துவர் ராதாகிருஷ்ணன், கால்நடை உதவியாளர்கள் மற்றும் ஆழ்வார்குறிச்சி பகுதி 2 விஏஓ டேனியல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று இறந்த ஆட்டுக்குட்டிகளை பார்வையிட்டனர்.

பின்னர் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு ஆய்வுக்காக ஆட்க்குட்டிகளின் முக்கிய உறுப்புகளை எடுத்துச் சென்றனர்.குளத்து கரையோர பகுதியில் ஜேசிபி மூலம் குழி தோண்டப்பட்டு இறந்த ஆட்டுக்குட்டிகள் புதைக்கப்பட்டன. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஆட்டுக்குட்டிகள் பட்டியில் அடைக்கப்பட்டு மூடப்பட்டதால் காலநிலை மாற்றத்தில் ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டு மூச்சு திணறலால் இறந்திருக்கலாம் என முதற்கட்ட ஆய்வில் தெரிகிறது. பரிசோதனைக்கு பிறகு முழு தகவல் கிடைக்கும், என்றனர். மேலும் ஆடுகளை பராமரிப்பவர்கள் ஆட்டுக்குட்டிகளை பட்டியில் அடைத்து மூடும்போது காற்று செல்வதற்கு மாற்றுவழி ஏற்படுத்த வேண்டும். ஒரு பட்டியில் குறைவான எண்ணிக்கையில்  ஆட்டுக்குட்டிகளை அடைக்க வேண்டும். அப்போதுதான் அதற்கு சுவாசக் கோளாறு ஏற்படாது என்றும் கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து ஆட்டுக்குட்டிகளின் உரிமையாளர் பரமசிவன் கூறுகையில், இறந்த ஆட்டுக்குட்டிகளின் மதிப்பு ரூ.1 லட்சத்துக்கு மேலாகும். இது எனக்கு பேரிழப்பாகும். இறந்த ஆட்டுக்குட்டிகளுக்கு இழப்பீடாக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

Tags : Mystery Road Chettikulam ,
× RELATED தென்காசியில் ராம் நல்லமணி யாதவா கல்லூரி பட்டமளிப்பு விழா