×

சேர்ந்தமரம் அருகே வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது

சுரண்டை, அக். 17:  சேர்ந்தமரம் அருகே வேலப்பநாடாரூரில் வடிகால் வசதி இல்லாததால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனை தாசில்தார் பார்வையிட்டு தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார். கடையநல்லூர் தாலுகா சேர்ந்தமரம் அருகே உள்ளது,  வேலப்பநாடாரூர். இந்த கிராமத்தில் சரியான வடிகால் வசதி இல்லையென கூறப்படுகிறது. மேலும் சாக்கடைகளும் முறையாக  அள்ளப்படவில்லை. இதுகுறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இந்நிலையில் வடகிழக்கு பருவமழை துவங்கி கடந்த 2 நாட்களாக நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வேலப்பநாடாரூரில் கொட்டித் தீர்த்த மழையில் கிராமத்தையே மழைநீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

தகவலறிந்து வந்த  கடையநல்லூர் தாசில்தார் அழகப்பராஜா,  வேலப்பநாடாரூர் கிராமத்திற்கு சென்று மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை பார்வையிட்டார். சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு  கால்வாயில் உள்ள அடைப்பு சரி செய்யவும், வாறுகால் ஆக்கிரமிப்பை அகற்றி சரிசெய்யவும் தாசில்தார் அழகப்பராஜா உத்தரவிட்டார். மேலும் சேர்ந்தமரம் அரசு பள்ளி மற்றும் மருத்துவமனை முன்பு வடிகால் இல்லாததால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், எனவே சாலையின் இருபக்கமும் வடிகால் அமைக்க வேண்டும் என சேர்ந்தமரம் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : houses ,Pattamaram ,
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்