×

குற்றாலம் கோயில் ஐப்பசி விசு திருவிழா சித்திர சபையில் நடராசமூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை

தென்காசி, அக். 17: குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழாவில் நேற்று சித்திர சபையில் நடராச மூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடந்தது. நாளை(18ம் தேதி) விசு தீர்த்தவாரி நடக்கிறது. குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழா, கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் கடந்த 12ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 13ம் தேதி தேரோட்டம், நேற்று முன்தினம் காலை மற்றும் மாலையில் நடராச மூர்த்திக்கு வெள்ளை சாத்தி தாண்டவ தீபாராதனை நடந்தது. நேற்று காலையில் சித்திர சபையில், நடராச மூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடந்தது. முன்னதாக சுவாமிக்கு பல்வேறு நறுமண திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. சிவனடியார்களின் சிவபூதகண வாத்தியங்களும் இசைக்கப்பட்டன. தாண்டவ தீபாராதனையை ஜெயமணிசுந்தரம் பட்டர் தலைமையில் கணேசன் பட்டர், பிச்சுமணி என்ற கண்ணன் பட்டர் ஆகியோர் நடத்தினர்.

இதில் கட்டளைதாரர்கள் மற்றும் கோயில் உதவி ஆணையர் விஜயலெட்சுமி, முன்னாள் அறங்காவலர் வீரபாண்டியன், இலஞ்சி அன்னையாபாண்டியன், திமுக ஒன்றிய செயலாளர் ராமையா, மாவட்ட துணை செயலாளர் ஆயான்நடராஜன், சோமசுந்தரம், ராஜேந்திரன், அதிமுக வார்டு செயலாளர் பாஸ்கர், கீழப்புலியூர் சங்கர், குத்தாலிங்கம், சர்வோதயா கண்ணன், பாஜ பொதுச்செயலாளர்கள் பிலவேந்திரன் உட்பட ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். நாளை (18ம் தேதி) காலை 9.20 மணிக்கு விசு தீர்த்தவாரி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு திருவிலஞ்சிக்குமரன் பிரியாவிடை கொடுக்கும் வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை நெல்லை இணை ஆணையர் பரஞ்சோதி, தக்கார் சங்கர், உதவி ஆணையர் விஜயலெட்சுமி மற்றும் கட்டளைதாரர்கள், திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Natarasamurthy ,Kutralam Temple Ipasi Visu Festival ,
× RELATED திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் வசந்த உற்சவம்