×

குமரி மருத்துவக்கல்லூரியில் மயக்கவியல் தினம் பொதுமக்களுக்கு, இருதய இயக்க மீட்பு சிகிச்சை பயிற்சி டீன் தலைமையில் நடந்தது

நாகர்கோவில்:   உலக மயக்கவியல் தினத்தையொட்டி பொதுமக்களுக்கு இருதய இயக்க மீட்பு சிகிச்சை பயிற்சி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16ம் தேதி உலக மயக்கவியல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி நேற்று மயக்கவியல் தினத்தையொட்டி, கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மயக்கவியல் துறை சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. மயக்கவியல் துறை தலைவர் டாக்டர் எட்வர்ட் ஜாண்சன் தலைமை வகித்தார். உறைவிட மருத்துவர் டாக்டர் ஆறுமுகவேலன், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அருள்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன் தொடங்கி வைத்து பேசியதாவது :

இருதய நோயினால் ஏற்படும் மாரடைப்பு தான் 60 சதவீத இறப்புகளுக்கு காரணமாக இருக்கிறது. அதிகப்படியான மாரடைப்புகள் வீடுகளில் ஏற்பட்டு, மரணத்தில் முடிகிறது. சிகிச்சை அளிப்பதில் ஏற்படும் ஒவ்வொரு நிமிட தாமதமும் நோயாளி பிழைக்க உள்ள வாய்ப்பை குறைக்கிறது. அதே நேரம் உடனடியாக கொடுக்கப்படும் இருதய இயக்க மீட்பு சிகிச்சை நோயாளி, பிழைப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. சாதாரண மனிதரும் இயக்க மீட்பு சிகிச்சையை செய்யலாம். அசைவின்றி கிடக்கும் நோயாளியை கண்டவுடன் காப்பாற்றுபவர் உடனடியாக ஆம்புலன்சுக்கோ, இன்னொரு நபரையோ உதவிக்கு அழைத்து விட்டு நெஞ்ச அழுத்த முறையை மார்பகத்தின் நடுப்பகுதியில் ஆரம்பிக்க வேண்டும். இவ்வழுத்தம் மணிக்கு 100, 120 முறை கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும்.

இந்த முறையை ஆம்புலன்ஸ் வரும் வரையோ, மருத்துவமனையில் சேர்க்கும் வரையோ அல்லது நோயாளி விழித்து உணர்வடையும் வரையோ செய்து கொண்டு இருக்க வேண்டும். இந்த எளிய செயல்முறையை கற்று கொள்வதால், உயிரை உரிய நேரத்தில் காப்பாற்றும் வாய்ப்பு கிடைக்கும் என்றார். இருதய இயக்க மீட்பு சிகிச்சை பற்றி செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. இதில் உதவி உறைவிட மருத்துவர் டாக்டர் ரெனிமோள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவில் நோயாளிகளுக்கு உதவியாக வந்திருந்தவர்களை அழைத்து அவர்களுக்கு இருதய இயக்க மீட்பு சிகிச்சைக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. குறிப்பாக இளம்பெண்கள் பலர் இதில் பங்கேற்று இந்த பயிற்சியை பெற்றனர்.

Tags : Anesthesiology Day ,Kumari Medical College ,Dean of Cardiovascular Recovery Therapy ,public ,
× RELATED மாநகராட்சி நிதியில் இருந்து குமரி...