×

ஏனாம் ஆய்வை பாதியிலே முடித்துக்கொண்ட கிரண்பேடி

புதுச்சேரி, அக். 17:     கடும் எதிர்ப்பு காரணமாக இரண்டாவது நாள் ஆய்வை தொடராமல் கவர்னர் கிரண்பேடி புதுச்சேரி திரும்பியுள்ளார்.  புதுச்சேரி பகுதியான ஏனாமில் கவர்னர் கிரண்பேடி ஆய்வுக்கு 2வது நாளாக எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே பேச்சுவார்த்தை வருமாறு கவர்னர் கிரண்பேடி விடுத்த அழைப்பை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிராகரித்த நிலையில், ஆய்வை முடித்துவிட்டு பாதியிலேயே புதுச்சேரி திரும்புகிறார். புதுவை மாநிலம், ஏனாம் பிராந்தியத்தில்  ஆய்வுப்பணியில் ஈடுபட அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டு கவர்னர் வரட்டும், இல்லாவிடில் ஏனாம் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார். அதை பொருட்படுத்தாத கவர்னர் நேற்று முன்தினம் ஏனாமில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.   அப்போது கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஏனாமில் பெரும்பாலான வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்தது. கவர்னரை பின் தொடர்ந்து சென்று எதிர்ப்பு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.   2வது நாளாக நேற்றும் அங்குள்ள மக்கள் கருப்புக் கொடி போராட்டத்தை தொடர்ந்தனர். அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை பேச்சுவார்த்தைக்கு வருமாறு கவர்னர்  அழைத்தார். இதுதொடர்பாக அமைச்சருக்கு, கவர்னர் எழுதியுள்ள கடிதத்தில், கவர்னருக்கு பாடம் புகட்டப்படும் என அமைச்சராக இருந்து கொண்டு கூறியது தவறு. அதை திரும்ப பெற வேண்டும். மேலும் சில ஆய்வுக்கான தனிப்பட்ட முறையில் நான் ஏனாம் வந்துள்ளேன்.

 இதுபற்றி ஏனாமில் நிர்வாக அலுவலகத்தில் காலை 11 மணிக்கு பேசலாம் என தெரிவித்தார். போராட்டத்தின் காரணமாக  2வது நாளாக நேற்று மேற்கொள்ள இருந்த ஆய்வுகளை கவர்னர்  ரத்து செய்தார். மேலும் 11 மணிக்கு கிரண்பேடி விடுத்த அழைப்பை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஏற்கவில்லை. இதனால் ஏனாம் மண்டல அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய கவர்னர், மதியம் 1 மணிக்கு அங்கிருந்து புதுச்சேரி புறப்பட்டார். அப்போது ஏனாம் பயணம் குறித்து கவர்னர் கூறுகையில், ஏனாமில் வரவேற்ற மற்றும் எதிர்ப்பு தெரிவித்த மக்களுக்கு நன்றி. ஏனாம் தீர்வு எண் 5ல் சுற்றுச்சூழல் சட்டம் மீறப்பட்டுள்ளது. அங்கு சுற்றுலாவுக்கு ரூ.5 கோடி வீணாக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசிக்கப்படும். மீண்டும் 3 மாதங்களுக்கு பிறகு ஏனாம் வருவேன் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறுகையில்,  கவர்னர் கிரண்பேடியின் அழுத்தம் காரணமாக ஏனாம் அதிகாரி மாரடைப்பால் காலமானார். இதற்கு யார் பொறுப்பு ஏற்பது?. மேலும் தற்போதைய ஆய்வு தனிப்பட்ட ஆய்வு என்றும், அரசு துறை ஆய்வு அல்ல என்றும் கிரண்பேடி கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.  இதற்கான செலவு முழுவதையும் அவரே ஏற்பாரா? மேலும் புதுவையில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 50 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளேன். வீராம்பட்டினம்- நல்லவாடு மீனவர்கள் பிரச்னைகள் தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.



Tags : Karnapedi ,
× RELATED புதுச்சேரியில் நாளை டாஸ்மாக்...