×

மணல் பாதையாக மாறிய தீர்த்தவாரி தார் சாலை

மரக்காணம், அக். 17: மரக்காணம் பேரூராட்சியின் கிழக்கு பகுதியில் உள்ளது தீர்த்தவாரி பகுதி. இங்கு பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அய்யனார் கோயில் உள்ளது. இந்த இடம் கடற்கரை ஓரம் அமைந்துள்ளதால் பொது மக்கள் நடைபயிற்சி செய்தல் மற்றும் மாலை நேரங்களில் தங்களது குடும்பங்களுடன் சென்று மகிழ்ச்சியாக கடலில் குளித்தல், இளைஞர்கள் தங்களுக்கு பிடித்த விளையாட்டு விளையாடுகின்றனர். இது போல் மரக்காணம் பேரூராட்சியில் சிறுவர்கள் உள்ளிட்ட பொது மக்கள் ஒன்று கூடி விளையாடி மகிழ எந்த ஒரு பூங்கா வசதியும் இல்லை. இதனால் இந்த தீர்த்தவாரி பகுதியில்தான் பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். இதனால் தினமும் இப்
பகுதிக்கு நூற்றுக்கனக்கான பொது மக்கள் ஒன்று கூடுகின்றனர்.

இதுபோன்ற காரணங்களால் இந்த இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய பூங்கா அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் மரக்காணம் இ.சி.ஆர் சாலையில் இருந்து இப்பகுதிக்கு கடந்த நான்கு ஆண்டுக்கு முன் பல லட்சம் ரூபாய் மதிப்பில் தார்சாலை அமைக்கப்பட்டது. ஆனால் இந்த சாலையை அமைத்த ஒப்பந்ததாரர் தரமான முறையில் சாலை அமைக்கவில்லை என்று பொதுமக்கள் குறை கூறுகின்றனர். இதனால் இந்த சாலை முற்றிலும் சிதிலம் அடைந்து அதில் இருந்த கற்கள் அனைத்தும் பெயர்ந்து தற்போது மண் பாதையாக மாறிவிட்டது. இதன் காரனமாக இவ்வழியாக செல்லும் அனைத்து வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் பெரும் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே பொது மக்களின் நலன் கருதி சேதம் அடைந்த இச்சாலையை உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Tirthavari Tar Road ,sand road ,
× RELATED திருட்டு, வழிப்பறி வழக்கில்...