×

காயார் கிராம கோயில் நிலங்கள் ஏலம் அறிவிப்பு

திருப்போரூர், அக்.17: திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள காயார் கிராமத்தில் ஆடேரீஸ்வரர் கோயில் மற்றும் வரதராஜப் பெருமாள் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு சுமார் 10 ஏக்கர் 52 சென்ட் நிலங்கள் உள்ளன. இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களையும் அவற்றுக்கு சொந்தமான நிலங்களையும் திருப்போரூர் கந்தசுவாமி கோயில் நிர்வாகம் சேர்ந்து கவனித்து வருகிறது.இந்நிலையில், வரதராஜப் பெருமாள் கோயில் நிலம் கடந்த 25 ஆண்டு காலமாக கவனிப்பாரற்று இருந்ததால், தனியார் ஆக்கிரமித்து அனுபவித்து வந்தனர். இதையடுத்து காயார் கிராம மக்கள் இந்த ஆக்கிரமிப்பை அகற்றி கோயிலுக்கு கையகப்படுத்த வேண்டும் என கலெக்டர் மற்றும் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு மனுக்கள் அனுப்பினர்.இதை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கையகப்படுத்தப்பட்டு, தற்போது ஆண்டு ரொக்க குத்தகைக்கு விடப்படுகிறது. இதையொட்டி, கடந்த ஆண்டு சுமார் ₹47 ஆயிரத்துக்கு நிலம் குத்தகைக்கு விடப்பட்டு, அறநிலையத்துறைக்கு வருவாய் கிடைத்தது.

கடந்த ஆண்டு குத்தகை ஒப்பந்தம் முடிவடைந்த பிறகும் புதிய குத்தகைக்கு ஏலம் விடவில்லை என கடந்த மாதம் 25ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது.இந்நிலையில், அறநிலையத்துறை சார்பில் அந்த நிலங்கள் கடந்த 14ம் தேதி ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் ஊழியர்கள் கோயில் முன்பு வந்து ஏலம் குறித்து அறிவித்தனர்.
அப்போது பொதுமக்கள் கோயில் செயல் அலுவலர் ஏன் வரவில்லை என்றும், கோயிலுக்கு நிரந்தர அர்ச்சகர் வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினர். அதற்கு அதிகாரிகள் மழுப்பலான பதில் அளித்தனர். இதையடுத்து செயல் அலுவலர் முன்ன்னிலையில் கோயில் நிலங்கள் குத்தகைக்கு விடவேண்டும் என பொதுமக்கள் திட்டவட்டமாக கூறினர். இதனால், ஏலம் தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்து விட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

Tags : Gayar Village Temple Auction Announcement ,
× RELATED மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர்...