×

நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கிராம மக்கள் மனு

சாத்தூர், அக். 16: பெரிய ஓடைப்பட்டி கண்மாய் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, சாத்தூர் தாலுகா அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர். சாத்தூர் அருகே, பெரியஒடைப்பட்டி ஊராட்சியில் பொத்துரெட்டியபட்டி, சிறுகுளம், என்.சுப்பையாபுரம் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் வழியாகச் செல்லும் நீர்வரத்து ஓடை வழியாக, பெரிய ஓடைப்பட்டி கண்மாய்க்கு மழை நீர் செல்லும். இந்த கண்மாயில் தேக்கி வைக்கப்படும் மழைநீர், 5 கிராமங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

இந்நிலையில், என்.சுப்பையாபுரம் விலக்கில் இருந்து பெரிய ஒடைப்பட்டி வரை நான்குவழிச்சாலையின் இருபுறமும் உணவகங்கள், எடை நிலையம், பாலிபோர்ட் நிறுவனங்களை அமைத்து நீர்வரத்து பாதைகளை ஆக்கிரமித்துள்ளனர். இதனால், கண்மாய்க்கு நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் மழைநீர் தேங்குவதால், விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. எனவே, பெரியஓடைப்பட்டி கண்மாய் நீர்வரத்து பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கிராம மக்கள், சிஐடியூ ஒன்றியச் செயலாளர் சரோஜா தலைமையில்,  சாத்தூர் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் செந்தில்குமாரிடம் மனுக்கொடுத்தனர்.




Tags :
× RELATED பணம் திருடியவர் கைது