×

வெள்ளகோவில் இரட்டை கொலை வழக்கு மேலும் 2 பேரிடம் விசாரணை

வெள்ளகோவில், அக். 16: வெள்ளகோவில் அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் பெண் உள்பட மேலும் 2 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், ஈசநத்தம் அருகே உள்ள தாசநாயக்கனூரை சேர்ந்தவர் செல்வராஜ்(50) இவர் மதுரை ஆரப்பாளையம் மேலபொன்னகரத்தில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவருடைய மனைவி வசந்தாமணி(42). இவர்களுக்கு பாஸ்கர்(27) என்ற மகனும், சரண்யா(25) என்ற மகளும் உள்ளனர். பாஸ்கருக்கு திருமணம் பேசி முடித்து வருகிற நவம்பர் 1ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. இதையடுத்து திருமண பத்திரிகையை உறவினர்களுக்கு செல்வராஜூம், அவருடைய மனைவியும் காரில் சென்று கொடுத்து வந்தனர். கடைசியாக கடந்த 10ம் தேதி திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள உத்தாண்டகுமாரவலசில் உள்ள செல்வராஜின் உடன் பிறந்த அக்கா கண்ணம்மாளுக்கு (54), அழைப்பிதழ் கொடுக்க சென்றனர். அப்போது சொத்து தகராறில் செல்வராஜ் மற்றும் அவரது மனைவியை கண்ணம்மாளும் அவரது மருமகன் நாகேந்திரனும் கொலை செய்து வீட்டின் அருகில் புதைத்தனர். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணம்மாள், நாகேந்திரன்  இருவரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

மேலும் இந்த கொலை தொடர்பாக நாகேந்திரனின் மனைவி பூங்கொடி, நாகேந்திரனின் நண்பர் இளங்கோ ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் தம்பதியை கொலை செய்தது எப்படி? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது;- செல்வராஜ்க்கு உடன்பிறந்த சகோதரிகள் மூன்று பேர். செல்வராஜ் கடந்த மாதம் தனக்கு சொந்தமான தோட்டத்தை ரூ.45 லட்சத்துக்கு விற்றுள்ளார். இதில் இரு சகோதரிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் கண்ணாத்தாள் ரூ.50 ஆயிரத்தை வாங்க மறுத்து தனக்கு ரூ.5 லட்சம் தரவேண்டும் என கேட்டுள்ளார்.  ஆனால் செல்வராஜ் ஒரு லட்சம் தருவதாக கூறி கடந்த 15 நாட்களுக்கு முன் கண்ணாத்தாளுக்கு தந்துவிட்டு, மகனின் திருமண அழைப்பிதழ் கொண்டு வருவதாக கூறியுள்ளார். ஆனால் கண்ணாத்தாளுக்கு கேட்ட பணம் தராத கோபம் மனதில் இருந்துகொண்டே இருந்துள்ளது. மேலும் கண்ணாத்தாள் மகள் கலப்பு திருமணம் செய்து கொண்டதற்கு, செல்வராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் கண்ணாத்தாளின் மருமகனுக்கும், செல்வராஜ் மீது மறைமுக பகை இருந்துள்ளது. இதை பயன்படுத்திய கண்ணத்தாளும், தேவேந்திரனும், செல்வராஜ் திருமண அழைப்பிதழ் கொடுக்க வரும்போது கொலை செய்ய திட்டமிட்டு வீட்டருகே ஏற்கனவே பெரிய பள்ளம் தோண்டி வைத்துள்ளனர். செல்வராஜ் திருமண அழைப்பிதழ் தருவதற்காக, மனைவியுடன் காரில் வந்து அழைப்பிதழை தந்துவிட்டு, அக்கா வீட்டில் சாப்பிட்டுள்ளார். இதையடுத்து சிறிது நேரம் பேசிவிட்டு செல்வராஜ் மற்றும் வசந்தமாணி கிளம்பி வாசலுக்கு வந்துள்ளனர். அப்போது, கண்ணாத்தாள், தனது மருமகன் உங்களை பார்த்து பேச வேண்டும் என நினைக்கிறார்.  இதையடுத்து செல்வராஜ் மீண்டும் வீட்டினுள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்ேபாது நாகேந்திரன் மற்றும் சிலர் அங்கு வந்துள்ளனர். வீட்டில் நுழைந்தவுடன் செல்வராஜை குளவி கல்லால் தாக்கியும், வசந்தாமணியை தாக்கி கழுத்தை அறுத்தும் கொன்றுள்ளனர். பின்னர் ஏற்கனவே தோண்டிய பள்ளத்தில் இருவரையும் புதைத்து விட்டு, யாருக்கும் சந்தேகம் வராதிருக்க, காரை கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை சாலையோரம் நிறுத்தி விட்டு சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.  மேலும் கொலை செய்து குழியில் புதைக்கும் முன்பு வசந்தாமணி அணிந்திருந்த நகைகளை எடுத்து அடகு வைத்துள்ளதாகவும், கைதான நாகேந்திரன் மீது ஏற்கனவே திருட்டு வழக்கு உள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Tags : murder trial ,Wellago ,
× RELATED டிஷா கொலை வழக்கு விசாரணை 12ம் தேதிக்கு...