×

மானாமதுரையில் சாலையோரம் நிறுத்தப்படும் சைக்கிள்களால் வாகன நெரிசல்

மானாமதுரை, அக்.16:  மானாமதுரை சிவகங்கை மெயின்ரோட்டில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் கட்டப்பட்ட கட்டடங்களால் உள்ளே இருந்த விளையாட்டு மைதானம் சுருங்கியது. மேலும் தற்போது புதிய கட்டிட பணிகளும் நடந்து வருகிறது. பள்ளி மாணவிகள் கொண்டு வரும் சைக்கிள்கள் அருகில் இருந்து நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தின் காலி இடத்தில் நிறுத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் முதல் அங்கு சைக்கிளை நிறுத்தக் கூடாது என நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் சைக்கிளை நிறுத்த வழியில்லாமல் மாணவிகள் அன்புநகர் மெயின்ரோட்டில் சைக்கிளை நிறுத்தி செல்கின்றனர். இந்த ரோடு 25 அடி அகலம் உள்ள நிலையில் இருபுறமும் சைக்கிள்கள் நிறுத்தப்படுவதால் ரோட்டில் அகலம் 15 அடியாக சுருங்கியது. இதனால் அப்பகுதியில் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவிற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அவசர மருத்துவ உதவிக்கு கூட ஆம்புலன்ஸ் வரமுடியாத அளவிற்கு சிரமம் உள்ளது.

இந்த ரோட்டின் வழியாக அன்புநகர், அண்ணாமலைநகர், ராம்நகர், பட்டத்தரசி, சாஸ்தாநகர் உள்ளிட்ட குடியிருப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் காலை 9 மணி முதல் மாலை 5.30 வரை அப்பகுதியை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் நிறுத்தியிருந்த சைக்கிள்களை அப்புறப்படுத்த கூறிய தகவல் மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன் வரை புகாராக போயும். பள்ளி மாணவிகளின் பிரச்னையில் எம்எல்ஏ கண்டுகொள்ளாமல் இருக்கிறார். அவரது வீடும் இதே பகுதியில் தான் உள்ளது. மாணவிகளின் சைக்கிள்களை நிறுத்த எம்எல்ஏ உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவேண்டும் என்றனர்.



Tags : Manamadurai ,
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை...