×

சிவகங்கை மாவட்டத்தில் போதிய பணியாளர்கள் இல்லாததால் சுகாதார பணிகளில் சிக்கல் வேகமாக பரவும் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

சிவகங்கை, அக். 16:  சிவகங்கை மாவட்ட ஊராட்சிகளில் போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் சுகாதார பணிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 12 பேரூராட்சிகள், 445 ஊராட்சிகள் உள்ளன. இதில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் துப்புரவு பணியாளர்கள் தேவையான எண்ணிக்கையில் நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது நகராட்சி, பேரூராட்சிகளிலேயே போதிய எண்ணிக்கையிலான துப்புரவு பணியாளர்கள் இல்லை. இதேபோல் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு ஊராட்சியிலும் மிகக்குறைவான எண்ணிக்கையில் சில துப்புரவு பணியாளர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி பணிகளுக்கு வரும் பல்வேறு திட்ட நிதி ஒதுக்கீட்டில் ஊராட்சி தலைவர்கள் கூடுதல் பணியாளர்கள் மூலம் துப்புரவு பணிகளை மேற்கொண்டனர். ஆனால் தற்போது உள்ளாட்சி அமைப்பு செயல்படாமல் இருப்பதால் அதுபோன்ற பகுதி நேர பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபடுவது இல்லை.

ஏற்கனவே நியமனம் செய்யப்பட்ட துப்புரவு பணியாளர்கள் மட்டுமே துப்புரவு பணி செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஊராட்சியிலும் குறைந்தபட்சம் ஒரு ஊரிலிருந்து அதிகபட்சம் 20 கிராமங்கள் வரை உள்ளன. இவையனைத்திலும் துப்புரவு பணியில் ஈடுபடும் அளவிற்கு பணியாளர் இல்லை. ஆண்டுதோறும் பருவமழை காலத்தில் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது வழக்கம். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவும், தற்போதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடிப்பது, கழிவுநீர் தேங்காமல் செய்வது, டயர்கள், தேங்காய் சிரட்டைகள், பயன்படுத்தாமல் உள்ள பழைய பொருட்களில் நீர் தேங்கி அதில் கொசுக்கள் உருவாவதை தடுக்க அந்த பொருட்களை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் செய்ய போதிய பணியாளர்கள் இல்லை. இதனால் லேசான மழை பெய்தாலே ஆங்காங்கே கழிவுநீருடன் மழைநீரும், குப்பைகளும் தேங்கி நிற்கிறது.

இதுகுறித்து அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் கூறியதாவது, ‘சிவகங்கை மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை முன் கூட்டியே எடுக்காமல், நோய் தாக்குதல் ஏற்பட்டால் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டவுடன் வந்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கமாகிவிட்டது. எனவே மழைக்காலம் துவங்கும் முன் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும். ஊராட்சிகளில் துப்புரவு பணி குறித்து ஆய்வு செய்து போதிய பணியாளர்கள் நியமிக்க வேண்டும்’ என்றார்.   



Tags : district ,Sivaganga ,spread ,
× RELATED தேவகோட்டை அருகே விபத்து: லாரி மோதியதில் வேன் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்