×

சட்டவிரோத மணல் குவாரிக்கு தடை

மதுரை, அக். 16: எட்டயபுரத்திலுள்ள சட்டவிரோத மணல் குவாரிக்கு தடை விதித்த ஐகோர்ட் கிளை, அனுமதித்திருந்தால் அவற்றை நிறுத்தி வைக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த பெருமாள், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:எட்டயபுரம் தாலுகா கீழநாட்டுக்குறிச்சி கிராமத்தில் தனியார் நிலத்தில் வேளாண் பணிகளுக்காக ஒரு மீட்டர் அளவுக்கு உபரி மணலை (சவடு) அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. வைப்பாற்று படுகையில் உள்ள இந்தப் பகுதியில் விதிகளை மீறி பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சுமார் 20 அடி ஆழத்திற்கு ஏராளமான லாரிகளில் மணல் அள்ளப்படுகிறது.இதன் அருகே ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலமும் உள்ளது. கோயிலுக்கு சொந்தமான நிலத்திலும், வைப்பாற்று படுகையிலும் சட்டவிரோதமாக மணல் குவாரி இயங்கி வருகிறது. இந்தப் பகுதி தான் விளாத்திகுளம் மற்றும் எட்டயபுரம் தாலுகாவின் முக்கிய நீராதாரமாக உள்ளது.

சட்டவிரோத குவாரியால், நிலத்தடி நீர்மட்டம் பாதித்து, சுகாதாரப் பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளன. விதிகளும், நிபந்தனைகளும் காற்றில் பறக்கின்றன. இதற்கு கனிமவளத்துறை அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, மனு அளித்தால் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கீழநாட்டுக்குறிச்சியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், கிருஷ்ணன்ராமசாமி ஆகியோர் நேற்று விசாரித்தனர். மனுதாரர் வக்கீல் தாளைமுத்தரசு ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் குறிப்பிட்டுள்ள பகுதியில் மணல் குவாரிக்கான நடவடிக்கைகளை உடனடியாக கலெக்டர் தடுத்து நிறுத்த வேண்டும். ஒருவேளை அனுமதி அளித்திருந்தால், இந்த நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை அனுமதியை நிறுத்தி வைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.


Tags :
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக...