கோவை மாவட்டத்தில் 6 நாட்கள் தொடர் சோதனை முறைகேடாக இயங்கிய 30 பார்களுக்கு சீல்

கோவை, அக்.16:  கோவை மாவட்டத்தில் முறைகேடாக இயங்கி பார்களுக்கு சீல் வைத்து, வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் பணி நடக்கிறது. கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் பார்கள் ஏலம் விடப்பட்டுள்ளது. மாவட்ட அளவில், 80க்கும் மேற்பட்ட மதுக்கடைகளுக்கு பார்கள் கிடையாது. சிலர், டாஸ்மாக் பார் என்ற அறிவிப்புடன் பார் நடத்தி வருவதாக தெரிகிறது. பார் மூலமாக பல லட்ச ரூபாய் வருவாய் குவித்து வருகின்றனர். முறைகேடு பார் தொடர்பாக புகார் அதிகமானதை தொடர்ந்து விஜிலன்ஸ் குழுவினர் மூலமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. உள்ளூர் விஜிலன்ஸ் குழுவினர், கண்டுெகாள்ளாததால் வெளியூர் டாஸ்மாக் விஜிலன்ஸ் குழுவினர் மூலமாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த 6 நாள் நடந்த சோதனையில், 30 முறைகேடான பார் கண்டறியப்பட்டு மூடி சீல் வைக்கப்பட்டது. வடக்கு கலால் மாவட்ட எல்லையில் 17 பார் முறைகேடாக இயங்கியது. செட்டிபாளையம் ரோட்டில் டாஸ்மாக் கடை அருகேயுள்ள பார் நேற்று மூடி சீல் வைக்கப்பட்டது.

பார் நடத்திய நபர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த நபர் வேறு பகுதியிலும் முறைகேடாக பார் நடத்தியதாக தெரியவந்துள்ளது. முறைகேடான பார்களில், பெட்டி பெட்டியாக மது பாட்டில்களை குவித்து விடிய விடிய விற்பனை செய்துள்ளனர். பெட்டிக்கடை, தள்ளு வண்டி கடைகளிலும் மதுபாட்டில் விற்பனை செய்யப்படுவது விஜிலன்ஸ் சோதனையில் ெதரியவந்துள்ளது. கடந்த காலங்களில் முறைகேடான பார்களில் இருந்து டாஸ்மாக், கலால், போலீஸ், சுகாதார துறையினர், உள்ளாட்சி அமைப்பினர் லஞ்சம் பெற்றுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. முறைகேடான பார் மூலமாக டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சுமார் 3 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.

Related Stories: