சேறும் சகதியுமாக மாறிய சிங்காநல்லூர் உழவர்சந்தை

கோவை அக்,  16 : கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள உழவர் சந்தை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. சுமார் 1.3 ஏக்கர் அளவில் 100 க்கும் மேற்பட்ட கடைகள் இங்கு உள்ளன. கோவை மாநகரில் உள்ள சூலார்,  இருகூர், நீலாம்பூர் போன்ற பகுதியில் உள்ள விவசாயிகள் தாங்கள் விவசாயம் செய்த காய்கறிகளை நேரடியாக பொதுமக்களிடையே விற்பனை செய்கின்றனர். மற்ற சந்தைகளை காட்டிலும் இங்கு விலை சற்று மலிவாக இருப்பதால் இங்கு வாடிக்கையாளர்கள் அதிகம் வருகிறார்கள். தற்பொழுது,  மழை பெய்து வருவதால்   விவசாயிகளும், வாடிக்கையாளர்களும் அதிகளவில் பாதிப்படைந்து வருகின்றனர். உழவர் சந்தைக்குள் இன்று வரை தார் தரை மற்றும் கான்கிரீட் தரை அமைக்கப்படவில்லை. ஆகையால் மழை நீரால்  சந்தை முழுக்க சேறும் சகதியுமாக உள்ளது. சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சகதிக்குள் நடந்துசென்று காய்கறிகளை வாங்க முடிவதில்லை.

வாடிக்கையாளர்கள் வரும் வாகனமும் சேற்றுக்குள் சிக்கிக்கொள்கின்றது. இதன் காரணத்தால் வாடிக்கையாளர்கள்  இங்கு வருவதை குறைத்துள்ளனர். ஆகையால் வியாபாரிகள் தங்களின் காய்கறிகளை விற்கமுடியாமல் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து வாடிக்கையாளர்கள் கூறுகையில், ‘பல ஆண்டுகளாக இந்த உழவர் சந்தையில் காய்களை வாங்கி வருகிறோம். மழை பெய்யும் நாட்களில் மட்டும் எங்களால்  காய்கறிகளை வாங்க மிகவும் சிரமப்படுகிறோம். இங்கு வரும் பெரியவர்கள் சேற்றுக்குள் நடக்கும்பொழுது, கீழே விழுகிறார்கள். ஆகையால் இந்த சந்தையில் தரமான தார் சாலை அமைக்கவேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: