×

கருவில்பாறைவலசு குளத்தை சீரமைத்தும் பயனில்லை

ஈரோடு, அக். 16: ஈரோடு அருகே வில்லரசம்பட்டி கருவில்பாறை வலசு குளத்தை ரூ.13.50 கோடி மதிப்பீட்டில் சீரமைத்து எந்த பயனும் இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட வில்லரசம்பட்டி கருவில்பாறை வலசு பகுதியில் 26.65 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. இந்த குளத்திற்கு கீழ்பவானி வாய்க்காலில் வரும் கசிவுநீரும், மழைக்காலங்களில் குளத்தில் தேங்கும் தண்ணீருமே நீராதாரமாக உள்ளது.
குளத்தில் தேங்கியுள்ள நீரால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், குளத்தை தூர்வாரி பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு சுற்றுச்சூழல்துறை மற்றும் வனத்துறை சார்பில் ரூ.13.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்தது.

இங்கு புல்வெளியுடன் கூடிய பூங்கா, குழந்தைகள் விளையாடி மகிழ ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு, நடைபாதை, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு போன்ற வசதிகள் செய்யப்பட்டது. மேலும், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பைபரால் ஆன 2 படகு வாங்கப்பட்டு படகு சவாரி துவங்கப்பட்டது.
ஆனால், ஓரிரு நாட்களிலேயே படகு சவாரி திடீரென நிறுத்தப்பட்டது. இதனால், பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் கூட்டம் குறைந்தது. மேலும், குளத்திற்கு நீர் வரும் வழித்தடங்கள் தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடப்பதால் நீர்வரத்தும் நின்று போனது. இதனால், குளத்தில் தேங்கி உள்ள நீரில் கொசுப்புழுக்கள் உருவாகி டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. பூங்காவும் பராமரிப்பின்றி உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், `இந்த பூங்காவிற்கு கனிராவுத்தர்குளம், வில்லரசம்பட்டி, ராசாம்பாளையம், எஸ்எஸ்பிநகர், மாணிக்கம்பாளையம், நசியனூர், கைகாட்டிவலசு, வெட்டுக்காட்டுவலசு, திண்டல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் மாலை நேரங்களில் மக்கள் வந்து சென்றனர். காலப்போக்கில் பூங்காவை முறையாக சீரமைக்காததால் பராமரிப்பின்றி உள்ளது. குளத்தில் தேங்கியுள்ள நீரால் டெங்கு கொசு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் பூங்காவை சீரமைக்கவும், நீர்வழித்தடங்களை தூர்வாரவும், மீண்டும் படகு சவாரி விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags :
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த 2 மையங்கள் அமைப்பு