மாநகராட்சி பகுதிகளில் ரூ.12 கோடியில் மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர்

ஈரோடு, அக். 16: ஈரோடு மாநகராட்சி பகுதியில் ரூ.12 கோடி செலவில் 19 இடங்களில் மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 16 இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டு தினமும் 2 டன் முதல் 5 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்பட்டு பிரிக்கப்படுகிறது. மீதமுள்ள 3 இடங்களில் கம்போஸ்டிங் சென்டர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் வெண்டிபாளையம் மற்றும் வைராபாளையம் குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த இரு குப்பை கிடங்கிலும் அதிகளவில் குப்பை சேர்வதால் இவற்றை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 32 கோடி ரூபாய் ரூபாய் மதிப்பீட்டில் வைராபாளையம் குப்பை கிடங்கில் ராட்சத சல்லடை இயந்திரங்கள் அமைக்கப்பட்டு உரம் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் (நுண்உரம் செயற்கை மையம்) அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி பகுதிகளில் உள்ள 5 வார்டுகளை ஒருங்கிணைத்து ஒரு இடத்தில் மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் வீதம் 19 இடங்களில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி முத்துசாமிகாலனி, வைராபாளையம், காவிரிரோடு, வெண்டிபாளையம், மோகன்தோட்டம், பெரியசேமூர், முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் உள்ளிட்ட 19 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 16 இடங்களில் மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 இடங்களில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. தற்போது அமைக்கப்பட்டுள்ள கம்போஸ்டிங் சென்டரில் 2 முதல் 5 டன் வரை குப்பை சேகரிக்கப்பட்டு அதில் இருந்து பிரிக்கப்பட்டு மக்காத குப்பைகளை கட்டிகளாக உருவாக்கி பின்னர், அதை எரிபொருளாக சிமெண்ட் மற்றும் சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சி பகுதியில் கம்போஸ்டிங் சென்டர்கள் மூலம் தினமும் 100 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதை சுலபமாக பிரித்து உரமாக்கி அந்த பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:

ஈரோடு மாநகராட்சியில் சேரும் குப்பைகளை தரம் பிரிக்கும் வகையில் மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் 16 இடங்களில் அமைக்கப்பட்டு குப்பைகள் தரம் பிரிக்கப்படுகிறது. அனைத்து வார்டுகளிலும் குப்பை தொட்டி அகற்றப்பட்டு பேட்டரி வாகனம் மூலம் துப்புரவு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனர். இதனால் சேரும் குப்பை அளவு குறைந்துள்ளது. இந்த மைக்ரோ கம்போஸ்டிங் சென்டருக்கு தினமும் கொண்டு வரப்படும் குப்பைகளை அன்றே தரம் பிரித்து உணவு கழிவுகள், காய்கறி கழிவுகளை உரமாக்கி அதை விவசாயிகளுக்கு வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், குப்பைகளை உடனடியாக மைக்ரோ கம்போஸ்டிங் சென்டரில் இருந்து அகற்றுவதால் சுற்றுச்சூழலுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் அமைக்கப்பட்டுள்ள மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் மூலம் குப்பைகளை சேகரிப்பதால் வெண்டிபாளையம், வைராபாளையம் கிடங்கில் குப்பைகள் சேருவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, கூடுதலாக மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் தேவை என்றாலும் கூடுதலாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

Related Stories: