செங்கோட்டை அருகே இலத்தூரில் விடிய விடிய மழை பள்ளியில் தேங்கிய மழைநீரால் மாணவர்கள் பரிதவிப்பு

செங்கோட்டை. அக்.16: செங்கோட்டை பகுதியில் விடிய விடிய பெய்த மழையால் இலத்தூர் பள்ளி வகுப்பறைக்குள் தண்ணீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து சாலையை உடைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. செங்கோட்டை அருகே  இலத்தூரில் அரசு நடுநிலைப்பள்ளி  உள்ளது.  இந்த பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று இந்த பகுதியில் இரவு முழுவதும் விடிய விடிய பெய்த மழையால்  பள்ளி வளாகத்தில்  மழை நீர் வெளியேற முடியாமல் தேங்கியது. இதனால் மாணவர்கள்  மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள்  முட்டளவு   தேங்கியிருந்த தண்ணீரின்  வழியாகவே பள்ளிக்கு நடந்து சென்றனர். இதையடுத்து அப்பகுதி  பொதுமக்கள் தண்ணீரை வெளியேற்றுவதற்காக  இலத்தூர் - அச்சன்புதூர்  சாலையை உடைத்து மடை அமைக்க முயற்சித்தனர்.

தகவலறிந்த   செங்கோட்டை தாசில்தார் ஓசன்னா  பெர்னாண்டஸ், டிஎஸ்பி. கோகுலகிருஷ்ணன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் பிடிஓ வெங்கடேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.  மழை நீரை வெளியேற்றுவது குறித்து  ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து மின் மோட்டார் உதவியுடன் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த  பொதுமக்கள் கூறியதாவது, கடந்த இரண்டு வருடங்களாக மழை காலங்களில் பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.மேலும் இந்த பள்ளி கட்டிடத்தில் ஓடுகள் சேதமடைந்துள்ளதால்   வகுப்பறைக்குள் தண்ணீரில் மிதக்கிறது.  இது சம்பந்தமாக பலமுறை செங்கோட்டை பிடிஓ விடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது  தாசில்தார் விரைந்து வந்து நடவடிக்கை எடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.

இதுகுறித்து செங்கோட்டை தாசில்தார் ஓசானா பெர்னாண்டஸ் கூறுகையில், இன்னும் 10 நாட்களில் இந்த பள்ளியில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும், உடைந்த ஓடுகளும் சரி செய்யப்படும் என உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து  பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

பாவூசத்திரம்: பாவூர்சத்திரம் பகுதியில் நேற்று  அதிகாலை பலத்த மழைபெய்தது. இதனால் பாவூர்சத்திரம் பஸ்நிலையத்தில் பயணிகள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கி கிடந்தது. பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதேபோல் பாவூர்சத்திரத்தில் உள்ள அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலப்பள்ளியில் நுழைவு வாயிலில் ரோட்டில் சென்ற தண்ணீர் உள்ளே புகுந்தது, இதனால் பள்ளி வளாகம் குளம் போல் காட்சி அளித்தது. இதனால் மாணவிகள் உள்ளே செல்ல முடியாமல் அவதிக்குள்ளானர்.

உடனடியாக பள்ளி வளாகத்தில் தேங்கிய தண்ணீரை கல்லூரணி ஊராட்சி பணியாளர்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் ஜேசிபி மூலம் தண்ணீரை வெளியேற்றினர். இதனையடுத்து மாணவிகள் சிரமமின்றி பள்ளி வளாகத்தில் சென்று வந்தனர். பாவூர்சத்திரம் செல்வவிநாயகபுரம் இந்திரா காலனி அருகே நெல்லை-செங்கோட்டை ரயில் தண்டவாளத்தில் சுரங்கபாதை அமைக்கபட்டது. நேற்று அதிகாலை பெய்த கனமழையால் சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கியது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் இதில் அலட்சியம் காட்டாமல் போர்கால அடிப்படையில் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: