×

எடையூரில் புயலால் பாதிக்கப்பட்ட தொலைபேசி நிலையம் செயலற்று கிடக்கும் அவலம் மக்கள் கடும் அவதி

முத்துப்பேட்டை, அக்.16: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர் ஊராட்சி ஒன்றியத்தில் பெரிய ஊராட்சிகளில் ஒன்றாகும். இங்கு ஒரு பரந்த கடைத்தெரு உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான வியாபார நிறுவனங்கள் உள்ளன. அதேபோல் அரசின் முக்கிய அலுவலகங்கள், வங்கிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஆகியவை உள்ளது. இதன் சுற்றுப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அதனால் அந்த கிராமங்களுக்கு இந்த கடைத்தெருதான் முக்கிய பகுதியாகும். அதேபோல் எடையூர் சிவன் கோயில் அருகே தொலைபேசி நிலையம் டவருடன் உள்ளது. இதன் மூலம் ஏராளமானோர் தொலைபேசி இணைப்புகள் பெற்றுள்ளனர். அதேபோல் இந்த பகுதியில் இதற்கு ஏராளமான வாடிக்கையாளர்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்தாண்டு இப்பகுதியை தாக்கிய கஜா புயலின் கோரதாண்டவம் இந்த தொலைபேசி நிலையத்தையும் விட்டு வைக்காமல் சேதப்படுத்தியது. மேலும் இதன் டவரும் சேதமானது. இதனால் இந்த தொலைபேசி நிலையத்திலிருந்து சிக்னல் பெற்று இயங்கி வந்த தொலைபேசிகள், செல்போன்கள் துண்டிக்கப்பட்டது. ஆனால் கஜா புயல் ஏற்பட்டு கடந்த 11மாதங்களை கடந்தும் இன்னும் சீரமைக்காததால் இந்த தொலைபேசி நிலையம் செயலற்று கிடக்கிறது.

இந்நிலையால் இங்கு பணியில் ஈடுபட்ட அலுவலர்களும் வருவது கிடையாது. ஆனால் தற்காலிக பணியாளர் ஒருவர் தினமும் திறந்து மூடி சென்று வருகிறார். மற்றப்படி எந்த செயல்பாடுகளும் இல்லை. அதனால் இதனை சீரமைத்து பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்று இப்பகுதி மக்களும் இந்த தொலைபேசி நிலையம் வாடிக்கையாளர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர் ஆனாலும் அலுவலர்கள் கண்டுக்கொள்ளவிலை. இதனால் இப்பகுதி மக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இனியும் காலதாமதம் ஏற்ப்படுத்தினால் போராட்டத்தை முன்னெடுக்கவும் தயார் நிலையில் உள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர் சங்கேந்தி நாகராஜ் கூறுகையில்:எடையு+ரில் உள்ள தொலைபேசி நிலையம் செயலற்று போய் கிடக்கிறது. விரைவில் இந்த தொலைபேசி நிலையத்தையும் செல்போன் டவரையும் விரைந்து சரி செய்யாவிட்டால் செல்போன் உபயோகிப்பவர்கள் சங்கம் இணைந்து மாபெரும் சாலை மறியல் அல்லது முத்துப்பேட்டை தொலைத்தொடர்பு அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த தயாராக உள்ளனர் என்றார்.

Tags : telephone station ,
× RELATED திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து...