கும்பகோணம் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பிளாஸ்டிக் பேப்பர் தட்டுப்பாடு செல்போன் வாட்ஸ் ஆப்பில் நகல் அனுப்பும் அவலம்

கும்பகோணம், அக். 16: கும்பகோணம் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பிளாஸ்டிக் பேப்பர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகளுக்கு எக்ஸ்ரே எடுத்து அதன் நகலை வாட்ஸ் ஆப்பில் அனுப்பி வருகின்றனர்.கும்பகோணத்தில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து தினந்தோறும் 1000க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 500க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் வந்து தினம்தோறும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதனால் 24 மணி நேரமும் நோயாளிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.வாகன விபத்தில் காயமடைந்தவர்களுக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்து லேசான காயம் என்றால் அங்கேயே சிகிச்சை அளிப்பதுடன், அதிக பாதிப்புகள் இருந்தால் தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு டாக்டர்கள் அனுப்பி வைப்பர்.

இந்நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு எக்ஸ்ரே எடுத்த பிறகு அதற்கான நகலை கொடுப்பர். அதை கொண்டு மருத்துவர்களிடம் காண்பித்து சிகிச்சை பெற்று கொள்வர். ஆனால் சில நாட்களாக எக்ஸ்ரே எடுத்த பிறகு அதன் நகலை வழங்காமல் நோயாளிகளிடம் செல்போன் இருந்தால் அதில் பதிவிறக்கம் செய்தும், நோயாளிகளிடம் செல்போன் இல்லாவிட்டால் டாக்டரின் செல்போன் எண்ணுக்கு பதிவிறக்கம் செய்து வருகிறார்கள். செல்போன் மூலம் அனுப்பும்போது நம்பர் மாறி வேறு எண்ணுக்கு சென்றாலோ, தவறி செல்போனில் பதிவு இல்லாமல் போனால் நோயாளிகளின் நிலை கேள்விக்குறியாகும். எனவே கும்பகோணம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு எக்ஸ்ரே எடுத்து அதன் நகலை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நோயாளி ஒருவர் கூறுகையில், மருத்துவமனையில் குறைந்தளவில் பணம் செலுத்தி எக்ஸ்ரேவை நோயாளிகள் எடுத்து கொள்வர். சிறிது நேரத்திற்கு பிறகு அதற்கான காப்பியை கொடுத்து அனுப்புவர். இந்த காப்பியை மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை பெற்று கொள்ளலாம். ஆனால் சில நாட்களாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்ததற்கான காப்பியை வழங்காமல் வாட்ஸ் ஆப்பில் மூலம் அனுப்புகிறார்கள். நோயாளிகளிடம் செல்போன் இருந்தால் அவர்களுக்கு அனுப்புகிறார்கள். நோயாளிகளிடம் செல்போன் இல்லையென்றால் டாக்டரின் செல்போனுக்கு அனுப்புகிறார்கள். இதுகுறித்து எக்ஸ்ரே எடுக்கும் பகுதியில் கேட்டபோது எக்ஸ்ரே பிளாஸ்டிக் பேப்பர் போதுமான அளவில் இல்லை. குறைந்தளவில் இருப்பதால் செல்போன மூலம் அனுப்புகிறோம் என்றனர். கும்பகோணம் மருத்துவமனைக்கு போதுமான அளவில் எக்ஸ்ரே இருப்பு வைத்திருக்க வேண்டும். அப்போது தான் அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியும். எனவே கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள எக்ஸ்ரே பிளாஸ்டிக் பேப்பர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்றார்.

Related Stories: