தஞ்சை பள்ளியக்ரஹாரம்- குடந்தை பிரிவு சாலையில் குழாய் பதிக்க தோண்டிய பள்ளம் மூடவில்லை 2 மாதமாக வாகன ஓட்டிகள் அவதி

தஞ்சை, அக். 16: தஞ்சை அருகே பள்ளியக்ரகாரம்- கும்பகோணம் பிரிவு சாலையின் ஒரு பகுதியில் குழாய் பதிக்க தோண்டிய பள்ளம் மூடப்படாததால் கடந்த 2 மாதங்களாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.தஞ்சை அருகே பள்ளி அக்ரகாரத்திலிருந்து மேற்குபுறம் அரியலூர் மார்க்கமும், கிழக்குபுறம் கும்பகோணம் மார்க்கமும் பிரிகிறது. கும்பகோணம் பிரிவு சாலையின் ஒரு பகுதியில் கூட்டு குடிநீர் திட்டத்துக்கான ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிக்காக சாலையின் பாதி பகுதி தோண்டப்பட்டது. பின்னர் குழாய் பதிக்கும் பணி ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்தது. இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது குழாய்கள் பதிக்கப்பட்டு அதன்மேல் தோண்டப்பட்ட மண்ணை கொண்டு மூடப்பட்டுள்ளது. அதன்மேல் முன்பு இருந்தவாறு தார்சசாலை போடவில்லை. இதனால் வாகனங்கள் இச்சாலையில் செல்ல முடியவில்லை.குழாய் பதிக்க குழி தோண்டியபோது எவ்வாறு இச்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததோ தற்போது பள்ளத்தை மூடிய பிறகும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் பள்ளத்தில் உள்ள மண்மேடு கீழிறங்கி மீண்டும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வாகனங்கள் சாலையின் ஒரு ஓரத்தில் செல்ல வேண்டியுள்ளது. அந்நிலையில் எதிரே வரும் வாகனங்கள் செல்ல வழியின்றி மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றன.

தஞ்சை- கும்பகோணம் சாலை முக்கிய சாலை என்பதால் எப்போதும் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகளவில் காணப்படும். இந்நிலையில் பள்ளியக்ரகாரம் ஜெம்புகாவிரி பாலத்திலிருந்து பைபாஸ் ரவுண்டானா வரை சுமார் அரை கி.மீ. தூரத்துக்கு சாலையின் ஒரு பகுதி தோண்டப்பட்டு சரியாக மூடப்பட்டு மீண்டும் தார்ச்சாலை போடப்படததால் இப்பகுதியில் போக்குவரத்து சீர்கெட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக தொடரும் இந்த அவலத்தால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் குழியில் விழுந்து காயத்துடன் எழுந்து செல்கின்றனர். அவ்வபோது சிறு சிறு விபத்துகள் நடந்து வருகிறது. எனவே பெரிய விபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினர் இதை கவனத்தில் கொண்டு உடனடியாக தோண்டப்பட்ட சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும். அப்போது தான் வாகன போக்குவரத்து அச்சாலையில் சீராக இருக்கும். இல்லையென்றால் பெரிய அளவில் விபத்துக்கு பிறகே நெடுஞ்சாலைத்துறை கண்விழிக்க நேரிடும் என அப்பகுதிவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியனிடம் கேட்டபோது, இச்சாலையை மீண்டும் பழையப்படி தார்ச்சாலையாக போட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: