×

வேளாண் இயந்திரம், கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைக்க விவசாயிகளுக்கு மானியம்

பெரம்பலூர், அக். 16: பெரம்பலூர் மாவட்டத்தில் மானியத்தில் வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பெரம்பலூர் கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாண் பணியாளர்கள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு நடப்பாண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் 4 அமைப்பதற்கு அரசு நிதி ஒதுக்கியுள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சொந்தமாக வாங்கி பயன்படுத்த இயலாததை கருத்தில் கொண்டு அவற்றை குறைந்த வாடகையில் பெற்று பயனடைய ஏதுவாக வேளாண்மை பொறியியல் துறை மூலம் வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கப்படவுள்ளது. ரூ.25 லட்சம் மதிப்பில் ஒரு வாடகை மையம் அமைக்க 40 சதவீத மானியம் என்ற அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

இம்மையம் வட்டார அளவில் அமைக்கப்படுவதால் விவசாய பணிகளுக்கு தேவைப்படும் பல்வேறு வகையான வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மற்றும் சிறு வேளாண் உபகரணங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் குறைந்த வாடகையில் தேவைப்படும் விவசாயிகளுக்கு கிடைப்பதால் விவசாய பணிகளை உரிய நேரத்தில் மேற்கொண்டு நல்ல மகசூல் பெற முடியும். இவ்வாறான மையங்களை அமைக்க முன்னோடி விவசாயிகள், விவசாய சுய உதவி குழுக்கள் மற்றும் தொழில் முனைவோர் போன்றோர் முன்வரலாம்.
வாடகை மையங்களுக்கு தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை அந்தந்த பகுதிகளில் சாகுபடியாகும் பயிர்கள், மண்ணின் தன்மை, வேலையாட்கள் பற்றாக்குறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இம்மையங்களை நடத்த முன்வருபவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இவ்வாறான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்களை அமைக்க முன்வருபவர்கள் வேளாண்மை பொறியியல் துறையால் அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களின் இயந்திரங்களில் இருந்து தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து கொள்ளலாம். இவ்வாறான மையங்களை அமைக்க விரும்புவோர் பெரம்பலூர் வேளாண்மை பொறியியல் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் .அவ்வாறு வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் அலுவலகத்தில் மூதுரிமை பதிவேட்டில் பதியப்படும். உதவி செயற்பொறியாளர் (வே. பொ) அலுவலகங்களுக்கு உரிய நிதி அளிக்கப்பட்டவுடன் அவ்வலுவலகம் மூலமாக மூதுரிமை அடிப்படையில் அம்மையங்களை நடத்த விண்ணப்பித்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.விவசாயிகள் குழுக்கள் தமக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் மொத்த தொகையை சம்பந்தப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ள முகவர்களிடம் வரைவோலையாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பெயரில் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்திய வரைவோலையின் நகலை உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகத்தில் அளித்தவுடன், மாவட்ட செயற்பொறியாளரால் (வே. பொ) வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் முகவருக்கு உரிய வழங்கல் ஆணை வழங்கப்பட்டு அம்மையத்திற்கு முகவரால் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் அனைத்தும் வழங்கப்படும்.

மொத்த மானியத்தொகையில் பொதுப்பிரிவினருக்கு ரூ.5 லட்சமும், ஆதிதிராவிட பிரிவினருக்கு ரூ.3 லட்சமும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பயனாளியின் “மானிய இருப்புநிதி கணக்கில்” 4 ஆண்டுகளுக்கு இருப்பில் வைக்கப்படும். மீதித்தொகை பயனாளியின் சேமிப்பு வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். 4 ஆண்டுகளுக்கு பின் பயனாளிக்கு மானியத்தில் வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் (வே. பொ) சரிபார்த்த பிறகு மானிய இருப்புத்தொகை பயனாளியின் வங்கி கணக்கில் திரும்ப வழங்கப்படும்.நடப்பு நிதியாண்டில் பெரம்பலூர் மாவட்டத்துக்கு 4 வாடகை மையங்கள் அமைக்க ரூ.40 லட்சம் மானியத்தொகையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையம் அமைக்க விரும்புவோர் உடனடியாக வருவாய் கோட்டத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Equipment Rental Centers ,
× RELATED வேளாண் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு