திருவிழாக்கோலம் காணும் திருக்கனூர் கடைவீதியில் அலைமோதும் கூட்டம்

திருக்கனூர், அக். 16:  விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலால், புதுவை பகுதியான திருக்கனூர், திருவிழா நடக்கும் பகுதி போல களை கட்டியுள்ளது.தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதனால் இப்பகுதிகளில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியும் தேர்தல் பிரசாரத்தால் பரபரப்பாகியுள்ளது. விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட மூங்கில்பட்டு, மதுரபாக்கம், குச்சிபாளையம், ராதாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் புதுச்சேரியின் எல்லை பகுதியான திருக்கனூரை ஒட்டி அமைந்துள்ளன. இதனால் மேற்கண்ட கிராமங்களுக்கு தேர்தல் பிரசாரத்திற்காக வரும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகளவில் திருக்கனூர் கடைவீதியில் குவிந்து வருகின்றனர்.

குறிப்பாக மாலை நேரங்களில் அதிகளவிலான தொண்டர்கள் திருக்கனூர் பகுதிக்கு வருகை தருகின்றனர். அப்போது திருக்கனூர் பகுதிகளில் கட்சி கொடிகளுடன் கூடிய கார்கள் திருக்கனூர் பகுதியில் அதிகளவில் வலம் வருகின்றன. இதனால் மதுக்கடைகளும், தேனீர் கடைகளும் நிரம்பி வழிகின்றன. இதனிடையே புதுச்சேரி கலால் துறை மதுக்கடைகளை 10 மணிக்கே மூட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் வரும் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை பிராந்தி கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் புதுச்சேரி பகுதியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தப்படலாம் என கருதப்படுவதால் புதுச்சேரி காவல்துறை மூலம் தமிழக எல்லைப்பகுதியில் சோதனைச் சாவடி ஒன்று அமைக்கப்பட்டு, வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று இரவு திருக்கனூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் புதுச்சேரியிலிருந்து தமிழக பகுதிக்கு செல்லும் வாகனங்களை அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் ஏதாவது செல்கிறதா என்பது குறித்து தீவிரமாக சோதனையிடப்பட்டது. மேலும் திருக்கனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தமிழக எல்லை

பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: