ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட ஊழியர்களுக்கு ரூ.5 ஆயிரம் தீபாவளி முன்பணம்

காரைக்கால், அக். 16: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட ஊழியர்களுக்கு, தீபாவளி முன்பணம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட ஊழியர்கள் சங்க தலைவர் பழனிவேல், செயலாளர் சுரேஷ் ஆகியோர் புதுச்சேரி ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், கடந்த 11 ஆண்டுகளாக இத்திட்டத்தில் பணியாற்றி வருகிறோம். எனினும் புதுச்சேரி அரசு எவ்வித சலுகையும் அளிக்கவில்லை. குறைந்தபட்சம் ஆண்டுக்கு 8 நாட்கள் சாதாரண விடுப்பு, 15 நாட்கள் மருத்துவ விடுப்பு, 30 நாட்கள் பிரசவ கால விடுப்பு அளிக்க பலமுறை வலியுறுத்தியும் நிறைவேற்றப்படவில்லை. எனவே, இக்கோரிக்கையை உடனே நிறைவேற்றவேண்டும். முக்கியமாக, தீபாவளி பண்டிகை வருவதால், ஊழியர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய, ஊழியர்களுக்கு தீபாவளி முன் பணமாக குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். பருவ மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் ஊழியர்களுக்கு மழைக் கோட் வழங்க வேண்டும். காரைக்கால் மற்றும் புதுச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட ஊழியர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களை பணியமர்ந்த வேண்டும். ஊழியர்கள் பலதரப்பட்ட பணிகளை மேற்கொள்ளும் நிலையில், பல்வேறு கிராமப் பகுதிகளுக்கு செல்ல வேண்டியிருப்பதால் நிரந்தர போக்குவரத்துப் படி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: