இயற்கை விவசாயத்தில் தீவிரம் காட்டவேண்டும்

காரைக்கால், அக். 16: காரைக்கால் மாவட்டம் வரிச்சிக்குடி கிராமத்தில் வசிக்கும் இயற்கை விவசாயி பாஸ்கர் என்பவர், 113 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட திட்டமிட்டு அதற்கான நாற்றங்காலை தயார் செய்து வருகிறார்.

காரைக்கால் மாவட்ட பிற விவசாயிகளிடையே இது குறித்த தகவல்களை கொண்டு சேர்க்கும் வகையில், காரைக்கால் மாவட்ட வேளாண்துறையின் கூடுதல் வேளாண் இயக்குனர் செந்தில்குமார் ஆலோசனையின்பேரில், வேளாண் துறையின் கீழ் இயங்கும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, காரைக்கால் பகுதி விவசாயிகள் பலர், பாரம்பரிய நெல் ரகங்களை, மாவட்ட வேளாண் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு வருகின்றனர். அந்த வகையில், மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா, சிறப்பு அழைப்பாளராக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பயிர் சாகுபடியை பார்வையிட்டு அவரை பாராட்டினார்.
Advertising
Advertising

தொடர்ந்து, கடந்த 50 ஆண்டுகளாக ஒட்டடையான் பாரம்பரிய நெல் ரகத்தை பாதுகாத்து வரும் நாகை மாவட்டம், நரசிங்க நத்தத்தை சேர்ந்த விவசாயி ஞானப்பிரகாசம், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமது அனுபவங்களை பகிர்ந்துகொண்டதோடு, விவசாயிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.பின்னர், கலெக்டர் விக்ராந்த்ராஜா கூறுகையில், பாரம்பரிய நெல் ரகங்கள் காரைக்கால் மாவட்டத்தில் பயிரிடும் முயற்சி பாராட்டுக்குரியது. தற்போது ரசாயனம் மூலம் உணவு பொருள் உற்பத்தி அதிகரித்துவரும் நிலையில், மக்கள் நமது முன்னோர்கள் சாப்பிட்ட உணவு பொருட்களை போன்று தற்போது கிடைக்காதா என்கிற ஆதங்கம் ஏற்படுவதை பார்க்க முடிகிறது.

அதனால், அதற்கேற்ப இயற்கை விவசாயத்தின் மீது விவசாயிகள் தீவிரம் காட்டினால், சுத்தமான, சுகாதாரமான, சுவையான உணவு பொருட்களை தாராளமாக உற்பத்தி செய்ய முடியும். அதுமட்டுமின்றி, இயற்கை விவசாயத்துக்கு குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படும். நல்ல மகசூல் கிடைக்கும். இதனை வேளாண்துறை மற்றும் ஆத்மா அமைப்பு ஆய்வு செய்து, இதன் மருத்துவக் குணங்களை கண்டறிந்து, இவற்றை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றார்.

Related Stories: