அரிசி போட முட்டுக்கட்டையாக இருக்கும் கிரண்பேடிக்கு, ரங்கசாமி ஜால்ரா போடுகிறார்

புதுச்சேரி, அக். 16: புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து சாமிபிள்ளைதோட்டம் பகுதியில் முதல்வர் நாராயணசாமி நேற்று வீடு, வீடாக சென்று கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். அவருடன் வைத்திலிங்கம் எம்பி, எம்எல்ஏக்கள் ஜெயமூர்த்தி, கீதாஆனந்தன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், காங்கிரஸ் பிரமுகர் காசிலிங்கம், இந்திய கம்யூ., முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன் மற்றும் கூட்டணி கட்சியினர் சென்றனர்.பிரசாரத்திற்கு இடையே முதல்வர் நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எதிர்க்கட்சி தலைவரை பொறுத்தவரை காமராஜர் நகர் தொகுதியை திரும்பி பார்க்காதவர். அவர் முதல்வராக இருந்தபோது தொகுதி பக்கமே வராதவர். காமராஜர் நகர் தொகுதியில் வெற்றி பெற்றால் ஆட்சி மாற்றம் கொண்டு வருவோம் என ரங்கசாமி கூறி வருகிறார். இதையே தான் நெல்லித்தோப்பு இடைத்தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தல், தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றிலும் கூறினார். மக்கள் அவரை நிராகரித்தார்கள், மரண அடி கொடுத்தார்கள். புதுவையில் நியமன உறுப்பினர்களை சேர்த்து மொத்தம் 33 எம்எல்ஏக்கள் உள்ளனர். திமுக மற்றும் கம்யூனிஸ்ட் ஆதரவு பெற்ற சுயேட்சையுடன் சேர்த்து நாங்கள் மொத்தம் 18 பேர் இருக்கிறோம். ஆனால்

7 பேரை வைத்துக் கொண்டு எப்படி ஆட்சி மாற்றம் கொண்டு வர முடியும்.

 மக்களை ஏமாற்றி வாக்குகளை சேகரிக்க இதுபோல் ரங்கசாமி பேசி வருகிறார். அவரது ஆட்சிக்காலத்தில் புதுச்சேரியில் தேனாறும், பாலாறும் ஓடியது போலவும், எங்கள் ஆட்சியில் மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றவில்லை எனவும் கூறி வருகிறார். புதுவை இப்போது அமைதி பூங்காவாக இருக்கிறது, மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு கொடுத்திருப்பது எங்கள் ஆட்சியில் தான். எங்கள் ஆட்சியில் பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். நாங்கள் முதியோர், விதவை உதவித்தொகை, சென்டாக் பணத்தை காலத்தோடு கொடுத்து வருகிறோம். அரிசி போட நிதி ஒதுக்கியும், கவர்னர் கிரண்பேடி முட்டுக்கட்டை போடுகிறார். அவருக்கு ரங்கசாமி ஜால்ரா போடுகிறார். எதிர்க்கட்சிகள் எல்லாம் கிரண்பேடிக்கு உறுதுணையாக இருந்து புதுச்சேரி மக்கள் நலனில் அக்கறை காட்டாமல் செயல்பட்டு வருகிறார்கள். கூட்டணி வேட்பாளர் நாரா.கலைநாதன் இங்கு போட்டியிட்டபோது, பிரசாரத்திற்கே வராமல் தொகுதியை புறக்கணித்தவர் தான் ரங்கசாமி. இப்போது தொகுதி வளர்ச்சி பற்றி பேச அவருக்கு அருகதை, தகுதி கிடையாது. இப்போது, தனது என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் நிற்பதால் ரங்கசாமி பிரசாரத்திற்கு வருகிறார். இது அவரது சந்தர்ப்பவாதத்தை, இரட்டை வேடத்தை காட்டுகிறது. முதல்வராக இருந்தபோது காமராஜர் நகர் தொகுதியை புறக்கணித்த ரங்கசாமியை மக்கள் புறக்கணிப்பார்கள்.

Related Stories: