நான் எப்போதும் மக்களுடன் இருக்கிறேன் காங். ஆட்சியில் ஒன்றுமே நடக்கவில்லையென குமுறல்

புதுச்சேரி,  அக். 16:  புதுச்சேரி காமராஜர் நகர்  தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் புவனா  (எ) புவனேஸ்வரனை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி நேற்று ரெயின்போ  நகரில் வீடு வீடாகச் சென்று ஜக்கு சின்னத்திற்கு  வாக்கு சேகரித்தார். இந்த தேர்தல் பிரசாரத்தின்போது ரங்கசாமி கூறியதாவது:காமராஜர்  தொகுதி முழுவதும் பிரசாரம் செய்து புவனேஸ்வரனுக்கு வாக்கு சேகரித்து  வருகின்றோம். மக்கள் நல்ல வரவேற்பு அளிக்கின்றனர். மக்கள் எழுச்சியாக  உள்ளனர். ஜக்கு சின்னத்துக்கு வாக்களிக்கும் எண்ணத்தோடு உள்ளனர்.  ஆளும்கட்சிக்கு கவர்னரை எதிர்த்து போராடுவது புதியது அல்ல. ஏற்கனவே  கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். தற்போது அமைச்சர் கருப்பு  கொடி காட்டி ஏனாமில் போராட்டம் நடத்தியுள்ளார்.

Advertising
Advertising

 ஆட்சியாளர்களுக்கு  கவர்னருக்கான அதிகாரம் பற்றி நன்றாக  தெரியும். செய்ய முடியாத திட்டங்களுக்கு யாராவது ஒருவர் மீது பழியை போட  வேண்டும். அதற்கு கவர்னரை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர்.

 நீதிமன்றமும் அரசுக்கு அதிகாரம் என கூறிவிட்டது. அதை வைத்து செய்ய  வேண்டியதுதானே. யார் உங்களை தடுத்தது. செய்ய முடியாததற்கு கவர்னரை கருவியாக இந்த அரசு பயன்படுத்துகின்றது. 2015ம்  ஆண்டு மழையின்போதும் காமராஜர் நகர் தொகுதியில் நான் சுற்றிப்பார்த்து ஆய்வு  மேற்கொண்டேன். நான் எப்போதும் மக்களுடன்தான் இருக்கிறேன். அவர்கள் என்னிடம் இந்த அரசின் மீதான குறைகளை கூறி வந்தனர். இந்த ஆட்சியில் ஒன்னுமே நடக்கவில்லை என குமுறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.  வாக்கு சேகரிப்பின்போது ரங்கசாமியுடன், அக்கட்சியின் பொதுச்செயலாளர்  பாலன், முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் அமைச்சர்கள் ராஜவேலு,  பன்னீர்செல்வம், அதிமுக மாநில செயலாளர் புருஷோத்தமன், சட்டமன்ற கட்சி   தலைவர் அன்பழகன், மாநில துணை செயலாளர் கணேசன், தொகுதி செயலாளர்  ஜானிபாய், தலைவர் ஆறுமுகம், பொருளாளர் ராதாகிருஷ்ணன், பாஜக தலைவர்  சாமிநாதன் எம்எல்ஏ மற்றும் வேல்முருகன், பாமக ஜெயபால், தேமுதிக வேலு, புதிய  நீதி கட்சி தர் ஆகியோர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

Related Stories: