×

முறைகேடுகளை தவிர்க்க ஏற்பாடு மருத்துவ மாணவர்களின் பெருவிரல் ரேகை பதிவு

தர்மபுரி, அக்.16: தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு எம்பிபிஎஸ் படிக்கும் மருத்துவ மாணவ, மாணவிகளிடம் இரண்டு கைகளின் பெருவிரல் ரேகைகள் பதிவு பெறப்படுகிறது என கல்லூரி முதல்வர் சீனிவாசராஜ் தெரிவித்தார்.நீட் தேர்வில் முறைகேடு செய்து மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்த விவகாரம் சமீபத்தில் வெளியானது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி, சிலரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தின் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் முதலாமாண்டில் மருத்துவக் கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களின் சான்றிதழ், நீட் தேர்வு ஆவணங்கள் உள்ளிட்டவற்றை மருத்துவக் கல்வி நிர்வாகம் ஆய்வு செய்தது. இதில், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில், நடப்பு கல்வியாண்டில், முதலாமாண்டு சேர்ந்த 100 மாணவர்களில் 99 மாணவர்கள், கடந்த செப்டம்பர் 20ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றனர். ஆனால், வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த மாணவர் இர்பான் மட்டும் பங்கேற்கவில்லை. இதையடுத்து அவரையும், அவரது தந்தையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து நேற்று தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் நடப்பாண்டு முதலாமாண்டு படித்து வரும், எம்பிபிஎஸ் மருத்துவபடிப்பு மாணவர்களிடம் இரண்டு கையின் பெருவிரல் ரேகைகள் வாங்கும்பணி நேற்று தொடங்கியது. கல்லூரி முதல்வர் சீனிவாசராஜ் தலைமையிலான மருத்துவ கல்லூரி பேராசிரியர் குழுவினர், தனித்தனியாக ஒவ்வொரு மாணவரிடமும் இரண்டு கையின் பெருவிரல் ரேகைகள் வாங்கும்பணியில் ஈடுபட்டனர். மேலும் சான்றிதழ் சரிபார்த்தல், புகைப்படம் சரிபார்த்தலும் மீண்டும் நடந்தது. இதுகுறித்து, கல்லூரி முதல்வர் சீனிவாசராஜ் கூறுகையில், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டில் 100 மாணவ, மாணவிகள் எம்பிபிஎஸ் மருத்துவபடிப்பிற்கு சேர்ந்தனர். இதில் ஒரு மாணவர் முறைகேடாக சேர்ந்ததையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது 99 மாணவ, மாணவிகள் மட்டும் நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு மருத்துவ படிப்பில் படித்து வருகின்றனர். தற்போது முதலாமாண்டு படித்து வரும் 99 மாணவ, மாணவிகளின் இரண்டு கையின் பெருவிரல் ரேகைகள் பதிவு பெறும் பணி நடக்கிறது. இன்று மாலையுடன் (16ம் தேதி) பெருவிரல் ரேகைகள் பணி முடிந்துவிடும். மாணவர்களின் புகைப்படம், சான்றிதழ் சரிபார்ப்பு பணி மீண்டும் நடக்கிறது என்றார்.


Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா