×

பென்னாகரம் அருகே 200 ஆண்டுகளுக்கு முந்தைய சந்நியாசி கல் கண்டுபிடிப்பு

தர்மபுரி, அக்.16: பென்னாகரம் அருகே 200 ஆண்டுகளுக்கு முந்தைய, சந்நியாசி கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அரசு கலைக்கல்லூரி வரலாற்று பேராசிரியர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் கோட்டை மாரியம்மன் கோயில் வளாகத்தின் அருகில் உள்ள வயல்வெளியில், 200ஆண்டுகளுக்கு முந்தைய சந்நியாசிகள் எனப்படும் வளமைக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் தர்மபுரி அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியரும், தொன்மம் வரலாற்று ஆய்வு அறக்கட்டளையின் தலைவருமான சந்திரசேகர் தலையில் குழுவினர் தொடர்ந்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து பேராசிரியர் சந்திரசேகர் கூறியதாவது, தமிழகத்தில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு சமணர்கள் இங்கே வந்தபோது, இப்பகுதியில் ஆடு மாடுகளுக்கு கொள்ளைநோய்  ஏற்பட்டு இருக்கலாம் எனவும், அவற்றை தங்களின் சித்தமருத்துவத்தின் மூலமாக குணப்படுத்தி இருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது. துறவிகளை சந்நியாசி என்ற பெயரில் அழைப்பது, தமிழர்களின் வழக்கங்களில் ஒன்றாகும். துறவிகள் இப்பகுதியிலிருந்து வேறு பகுதிகளுக்கு சென்ற போது, அவர்கள் பயன்படுத்திய மந்திரச் சொற்கள் அடங்கிய தகடு போன்ற பொருட்களில் இருக்கும் குறியீடுகளை, கல்லில் செதுக்கி வைத்து மீண்டும் கால்நடைகளுக்கு இத்தகைய நோய் பரவாமல் இருக்க நட்டுச் சென்றிருக்கலாம். இக்கல் சுமார் 3 முதல் 4 அடி உயரம் உள்ளது. இதன் முன் பகுதியில் சூரியன் மற்றும் சூலக் குறியீடுகள் காணப்படுகின்றன.

வில்லிலிருந்து சூலம் அம்பு போல வரையப்பட்டுள்ளது. அதனருகில் 8 பக்கமும் சூலக் குறியீடுகள் இருப்பது போலவும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சதுரங்கள் அவற்றுக்கு இணை கோடுகள் வரையப்பட்டுள்ளன. இதன் பின்பகுதியில் சந்திரனும், சூல குறியீடும் காணப்படுகின்றது. இக்கல் சூலக்கல் எனவும், அதனருகில் எட்டு பக்கமும் சூலக் குறியீடுகள் இருப்பது போலவும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சதுரங்கள் அவற்றுக்கு இணை கோடுகள் வரையப்பட்டுள்ளன. இதன் பின்பகுதியில், சந்திரனும் சூல குறியீடும் காணப்படுகின்றது. இக்கல் சூலக்கல் எனவும் அழைக்கலாம்.  இக்கல்லின் மீது ஆண்டிற்கு ஒருமுறை அதாவது, பொங்கலின் கடைசி நாளன்று அல்லது ஆடி மாதம் சுமார் 108 அல்லது 1008 எனும் எட்டு என முடியக்கூடிய எண்ணிக்கை கொண்ட குடங்களில் தண்ணீரை ஊற்றி மஞ்சள் குங்குமம் இட்டு வழிபட்டு, அத்தண்ணீரின் மீது தங்களின் கால்நடைகளை நடக்க விடுவதன் மூலமும், நீரை எடுத்து கால்நடைகள் மீது தெளிப்பதன் மூலமாகவும், தங்கள் கால்நடைகளுக்கு ஏற்படக்கூடிய நோயை தீர்த்துக் கொள்ளவும், கால்நடைகளின் வளம் பெருகும் எனவும் மக்கள் நம்புகின்றனர். சந்நியாசிகளால் வைக்கப்பட்டதால் இது சந்நியாசிக்கல் என்றும், ஆடு, மாடுகளின் வளம் பெருகும் என்பதால் வளமைக்கல் என்றும் அழைக்கப்படுகிறது. மோதூர், அச்சல்வாடி, கூக்கடப்பட்டி ஆகிய இடங்களில் இத்தகைய சந்நியாசிக்கல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Pennagaram ,
× RELATED எலிகளிடம் வெற்றி; அடுத்து குரங்குகள்...