×

சந்திரசூடேஸ்வரர் கோயிலில் 117 அடியில் ராஜகோபுரம் கட்டும் பணி தீவிரம்

ஓசூர், அக்.16: ஓசூரில் பிரசித்தி பெற்ற பிரகதாம்பாள் சந்திரசூடேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த மலைக்கோயிலின் பிரதான நுழைவு வாயிலில் 7 நிலை(அடுக்கு) கொண்ட 117 அடி உயரமுள்ள ராஜகோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது.
கடந்த 15ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசை ஆண்ட அச்சுதராயர் மன்னரின் ஆட்சி காலத்தில் மலை கோயிலின் பிரதான வாயிலில் ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. அப்போது போர் மற்றும் சில காரணங்களால், ராஜகோபுரம் கட்டும் பணி பாதியில் நின்றது. பின்னர் நீண்ட காலமாக கோபுரம் கட்டும் பணி முடிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், அந்த பழமையான கோபுரத்தை இடித்துவிட்டு புதிய கோபுரம் கட்ட சந்திரசூடேஸ்வரர் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் அப்பகுதி பொது மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த 2011ம் ஆண்டு முதல் 7 நிலை கொண்ட புதிய ராஜகோபுரம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர் கமிட்டி தலைவர் மனோகரன் கூறுகையில்,  டிவிஎஸ் தொழிற்சாலையின் நிதி உதவியுடன் சந்திரசூடேஸ்வரர் கோயிலின் பிரதான வாயிலில் 7 நிலை கொண்ட ராஜகோபுரம் 117 அடி உயரத்தில் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த 7 நிலைகளில் முதல் நிலை மட்டும் கருங்கற்களில் சிற்பங்களை செதுக்கி கட்டப்பட்டதால் காலதாமதம் ஆனது. தற்போது, முதல் நிலை முடிந்துள்ளது. மீதமுள்ள 6 நிலைகளில் ராஜகோபுரம் கட்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

Tags : Rajagopuram ,Chandrasudeeswarar temple ,
× RELATED சமயபுரம் மாரியம்மன் கோயிலில்...