×

இருநாட்டு தலைவர்கள் சந்திப்புக்காக ஜொலித்ததுபோல் மாமல்லபுரம் அதே பொலிவுடன் பராமரிக்கப்படுமா?

மாமல்லபுரம், அக். 16: மாமல்லபுரத்தில் இரு தலைவர்கள் சந்திப்புக்காக ஜொலித்ததைபோல், எப்போதும் பொலிவுடன் பராமரிக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்ப்பார்க்கின்றனர். பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் சமீபத்தில் மாமல்லபுரம் வந்து சென்றனர். அவர்களது, வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி விரிவுபடுத்தப்பட்டு, புதிய சாலைகளை அமைத்தனர். இதில், வெண்ணெய் உருண்டை கால் உள்பட பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. இந்நிலையில், இரு நாட்டு தலைவர்கள் வந்து சென்ற பிறகு, அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட ஒரு சில இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகள் முளைக்க தொடங்கியுள்ளன. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், உலக சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் மாமல்லபுரத்தில், பல்லவர் கால புராதான சின்னங்களை காண உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தினமும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
கடந்த வாரம் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பேசும் நிகழ்வு மாமல்லபுரத்தில் நடந்தது. இதுஎங்கள் ஊருக்கு மிகப் பெரிய பெருமையை சேர்த்துள்ளது. இரு நாட்டு தலைவர்கள் வருகையையொட்டி கடந்த பல ஆண்டுகளாக சாலை ஓரங்களில் தொப்பி, கண்ணாடி, ஐஸ்கிரீம் போன்ற சிறு கடைகளை அகற்றி புதிய சாலை அமைத்தனர்.

தற்போது சாலைகளை பார்ப்பதற்கு அழகாகவும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும் உள்ளது. இப்படியே, இருந்தால் ஊரும் அழகாக இருக்கும். சுற்றுலாப் பயணிகளும் போக்குவரத்து நெரிசல் உள்பட  எந்த சிரமமும் இன்றி வந்து செல்வார்கள். அதேப்போல், தொல்லியல் துறை, சுற்றுலாத் துறை, பேரூராட்சி நிர்வாகம் தற்போது புதுப்பொலிவு பெற்றுள்ள மாமல்லபுரத்தை தொடர்ந்து இதேப்போன்று பாதுகாத்து பராமரிக்க வேண்டும்.  சாலையோரங்களில் கடைகள் வைத்திருந்தவர்கள், அந்தக் கடைகளையே நம்பியே குடும்பம் நடத்தினர். எனவே சுற்றுலாப் பயணிகளுக்கும் சிரமமின்றி, அதே நேரத்தில் சாலையோரங்களில் சிறு கடைகள் நடத்தி வருபவர்கள் குடும்ப நிலைமையையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு அதே இடத்தில் தனியாக ஒரு இடம் ஒதுக்கி வணிக வளாகம் கட்டி கொடுத்தால் நன்றாக இருக்கும்’ என்றனர்.

Tags : Mamallapuram ,meeting ,leaders ,
× RELATED மாமல்லபுரத்தில் சிற்பக்கலை கல்லூரி...