×

டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி எதிரொலி மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக மக்கள் சாலை மறியல்

திருவள்ளூர், அக். 16:  வடகிழக்கு பருவ மழை காலம் துவங்க உள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். போதிய படுக்கைகள் இல்லாததால், சென்னைக்கு  பரிந்துரை செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.  உள்ளாட்சிகளில் பொதுசுகாதாரம் பாதுகாக்கப்படுவது நாளுக்கு நாள் சவாலாக மாறி வருகிறது. பொதுசுகாதார பணிகளை மேற்கொள்ள போதுமான அளவில் பணியாளர்கள் இல்லை என்பது ஒருபுறம், மறுபுறம் பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்மையால் வீட்டில் சேரும் குப்பை தெரு, வாய்க்கால்களில் வீசி எறிய சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற செயல்களால் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நோய் பரப்பும் காரணிகளான ஈ, கொசு போன்றவை எந்நேரமும் தொல்லைகளாக உருவாகி உள்ளன. நகராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப சுகாதார பணியாளர்கள் இல்லை. நகர் பகுதிகளில் 7 முதல் 10 நாட்களுக்குள் கழிவுநீர் அகற்றும் பணி நடக்கிறது. ஆனால் ஊராட்சிகளில் மூன்று மாதம், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கழிவு நீர் அகற்றும் பணி நடக்கிறது. ஊராட்சியில் குறைந்த சம்பளத்திற்கு பணியாளர்கள் வருவது இல்லை.  இதனால் நகரம் மற்றும் கிராமங்களில் வசிக்கும் மக்கள் காய்ச்சல் பாதிப்பால் அவதிப்படுகின்றனர். அவர்கள் சிகிச்சைக்கென திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் குவிந்தவண்ணம் உள்ளனர். குறிப்பாக குழந்தைகள் வார்டில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமான சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு ரத்தம், சிறுநீர் உட்பட பல பரிசோதனைகள் செய்யப்படுகிறதே தவிர, என்ன காய்ச்சல் என மருத்துவர்கள் கூற மறுக்கின்றனர்.

தொடர்ந்து காய்ச்சல் முற்றியபிறகு சென்னை அரசு பொது மருத்துவமனை அல்லது எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு பரிந்துரை செய்கின்றனர். இதனால், என்ன காய்ச்சல் என தெரியாமல் கைக்குழந்தைகளுடன், அவர்களது பெற்றோர் அலைவது பரிதாபமாக உள்ளது.  மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், நேற்று காலை 9 மணி நிலவரப்படி சிறுவர்கள், குழந்தைகள் என 50க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு பீதியால் மேலும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்தவண்ணம் உள்ளனர். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் குறுகிய கட்டிடத்தில் புறநோயாளிகள் பிரிவு இயங்கி வருகிறது. இங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வரும் புறநோயாளிகள் சீட்டு பெற, மருத்துவர்களிடம் சிகிச்சை பெற, ரத்தப்பரிசோதனை செய்ய, மாத்திரைகள் வாங்க, ஊசி போட்டுக்கொள்ள என ஆங்காங்கே நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது.

நேற்று மட்டும் டெங்கு பீதியால், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள குவிந்தனர். அவர்கள் உட்கார இடமின்றி சுவரில் சாய்ந்தபடியும், உடன் வந்தவர்கள் மீது சாய்ந்தபடியும் காத்துக் கிடந்தனர்.
திருவள்ளூர் அடுத்த தண்டலம் கிராமத்தில், 9 வயது சிறுமி மோனிஷா, நேற்று  முன்தினம் டெங்கு காய்ச்சலுக்கு பலியான நிலையில், அக்குடும்பத்தினருக்கு  ஆறுதல் கூற எந்த அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு செல்லவில்லை.  மேலும்,  ஒரு இறப்பு சம்பவம்  நடந்தும், அக்கிராமத்தில் சுகாதார பணிகளை மேற்கொள்ள  எவ்வித நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் செய்யவில்லை. வருவாய்த்துறை  அதிகாரிகளும் கிராமத்துக்கு வரவில்லை. இதில், ஆத்திரமடைந்த அக்கிராம  மக்கள் 100க்கும் மேற்பட்டோர், திருவள்ளூர் - பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில்  உள்ள கசவநல்லாத்தூர் பகுதியில் நேற்று காலை 10.30 மணிக்கு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால்,  போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு கடம்பத்தூர்  போலீசார் விரைந்துசென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி  சமாதானப்படுத்தினர். அதன்பின்னர் மறியல் கைவிடப்பட்டது. இதனால்,  அச்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
மாவட்டம் முழுவதும் டெங்கு தலைவிரித்தாடி, 20க்கும் மேற்பட்டோரை கடந்த 2016ம் ஆண்டு பலி வாங்கியுள்ளது. இந்நிலையில், நடப்பாண்டு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டெங்குவால் திருத்தணி அடுத்த மருதவல்லிபுரம் நடராஜன் மகன் நிஷாந்த்(11 மாதம்), தெக்களூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் மகள் யோகேஸ்வரி(12), அருங்குளம் கிராமத்தை சேர்ந்த வேலு மனைவி சங்கீதா(21), திருவள்ளூர் அடுத்த தண்டலம் வெங்கடேசன் மகள் மோனிஷா(9) ஆகிய 4 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இந்நிலையில், திருத்தணி அடுத்த மத்தூர் கிராமத்தை சேர்ந்த அமிர்தலிங்கம் மகள் நந்தினி(5) என்ற சிறுமியை பலி வாங்கியுள்ளது. இதனால், டெங்கு பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொடுமை இனிவரும் காலங்களில் வராமல் இருக்க உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் சுகாதாரத்தை பேணி காக்கும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும். மக்கள் கூறுகையில், “திருத்தணி பகுதியில் மர்ம காய்ச்சல் பரவிவருகிறது. உள்ளாட்சி நிர்வாகத்தில் நிதி இல்லாததால் தள்ளாடி வருகிறது. இதன் காரணமாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. எனவே உள்ளாட்சி நிர்வாகத்துக்கு தேவையான நிதி உதவியை உடனடியாக வழங்கி நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றனர்.

ரத்த அணுக்களின் எண்ணிக்கையை கண்டறியும் ‘செல் கிட்’ காலி
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தட்டணுக்களின் எண்ணிக்கையை கண்டறிய ‘’செல் கிட்’’ தேவைப்படுகிறது. இந்த பரிசோதனை மூலம், தட்டணுக்களின் என்ணிக்கையை வைத்துதான் டெங்கு காய்ச்சல் என முடிவு செய்யப்படுகிறது.
ஆனால், அதற்கான கிட் தற்போது போதிய அளவு சப்ளை செய்யப்படுவதில்லை. இதனால், கடந்த 3 நாட்களாக காய்ச்சல் நோயாளிகளுக்கு ரத்தப்பரிசோதனை செய்தும், அதற்கான பரிசோதனை முடிவுகளை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ரத்தம் கொடுத்த நோயாளிகளும் என்ன காய்ச்சல் என தெரியாமல் அலைந்து வருகின்றனர். எனவே, அரசு மருத்துவமனைக்கு ரத்த அணுக்களின் எண்ணிக்கையை கண்டறிந்து உடனடியாக முடிவுகளை வழங்க ‘செல் கிட்’ களை போதியளவு அரசு சப்ளை செய்யவேண்டும். இல்லையேல், மேலும் உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது.    

Tags : district administration ,
× RELATED ஊட்டி மகளிர் தின விழாவில் நடனமாடிய கலெக்டர், டிஆர்ஓ