கிண்டி நரசிங்கபுரத்தில் கால்வாயில் இருந்து அகற்றிய திடக்கழிவு சாலையில் குவிப்பு: வாகன ஓட்டிகள் சிரமம்

ஆலந்தூர்: கிண்டி சிட்டி லிங்க் ரோடு நரசிங்கபுரம் பகுதியில் உள்ள சாலையோர கால்வாய்களில் திடக்கழிவுகள் அதிகமாக தேங்கி, அடைப்பு ஏற்பட்டதால் மழைக் காலங்களில் நீரோட்டம் தடைபட்டு, கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையிலும், குடியிருப்பு பகுதியிலும் தேங்கி வந்தது. எனவே, இந்த கால்வாயை தூர்வாரி, சீரமைக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, சென்னை மாநகராட்சி சுகாதார பிரிவு சார்பில், கடந்த 10 நாட்களுக்கு முன், இந்த கால்வாயை தூர்வாரும் பணி நடந்தது.

அப்போத, கால்வாயின் மேன்ஹோல்கள் வழியாக திடக்கழிவுகளை வெளியே எடுத்த துப்புரவு பணியாளர்கள், அதை கோணிப் பைகளில் கொட்டி மூட்டைகளாக கட்டி அதே பகுதியில் வைத்தனர்.ஆனால், அவற்றை இதுவரை அகற்றாததால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும், இரவில் இவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் தடுமாறி விழுந்து செல்லும் நிலை உள்ளது. எனவே, மூட்டைகளில் அடைத்து, சாலையில் குவித்துள்ள திடக்கழிவுகளை விரைந்து அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: