அரசு மகளிர் பள்ளியில் பாலியல் விழிப்புணர்வு

பெரம்பூர்: புளியந்தோப்பு, கன்னிகாபுரத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 450 மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொடர்பான விழிப்புணர்வு முகாம், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையில் நேற்று நடந்தது. முகாமில், சந்தேகப்படும்படி பள்ளிக்கு வெளியே ஆண் நபர்கள் இருந்தால் இதுகுறித்து பெற்றோர் அல்லது போலீசிடம் தொலைபேசியில் தகவல் தெரிவிக்கலாம். தமிழக அரசு சார்பில் அம்மா ரோந்து வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

போலீசுக்கு போன் செய்த சில நிமிடங்களில் நீங்கள் இருக்கும் இடத்துக்கு அந்த வாகனமும், போலீசாரும் வந்து உதவுவார்கள். இளம் வயதில் ஏற்படும் பாலியல் தொல்லை குறித்து மாணவிகள் எவ்வாறு விழிப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. மேலும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவிகள் அடுத்த வருடம் என்ன படிக்கலாம், வேலைவாய்ப்புக்கு பதிவுசெய்வது, என்னென்ன துறைகளில் வேலைவாய்ப்பு உள்ளது என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவிதா விளக்கினார். இதில், பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: