பணியிடை நீக்கத்தால் விரக்தி எம்டிசி டிரைவர் தற்கொலை: பரபரப்பு கடிதம் சிக்கியது

ஆவடி: பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் மாநகர பஸ் டிரைவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருநின்றவூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருத்தணி போர்டு வள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகரன் (50). இவர், மாநகர போக்குவரத்து கழகத்தின் சென்னை அண்ணாநகர் பணிமனையில் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் ராஜசேகரன் பணியில் இருந்தபோது, இவர் ஓட்டிச் சென்ற மாநகர பஸ், பைக் மீது மோதி ஒரு வாலிபர் இறந்தார். இதையடுத்து, மாநகர போக்குவரத்து கழகம், டிரைவர் ராஜசேகரனை தற்காலிக பணி நீக்கம் செய்தது.  இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜசேகரன், நேற்று காலை திருநின்றவூர், சிடிஎச் சாலையில், தனியார் கம்பெனி அருகில் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த திருநின்றவூர் போலீசார் சம்பவ இடைத்துக்கு வந்து, சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சடலம் அருகே மது பாட்டில் மற்றும் பூச்சி மருந்து பாட்டில் கிடந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினர். முதற்கட்ட விசாரணையில், ராஜசேகரன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது பாக்கெட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார், அதில் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. மிகுந்த மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன், என எழுதியிருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: