தமிழகத்தில் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உதவித்தொகை பெற விழிப்புணர்வு இல்லாமல் ₹169.81 கோடி நிதி முடக்கம்

வேலூர், அக்.16: தமிழகத்தில் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உதவித்தொகை பெற 169.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் நிதி முடங்கியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. தமிழகத்தில் விவசாய தொழிலாளர்கள் மற்றும் குறு, சிறு விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயனடையும் வகையில், சமூக பொருளாதார நிலையை உயர்த்த உழவர் பாதுகாப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் விவசாயத்தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு பல்வேறு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதில் திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம், விபத்தின் மூலம் இறப்பு நிதிஉதவி, இயற்கை மரணம், ஈமச்சடங்கு செலவு என்று வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 18 வயது முதல் 65 வயது உடைய விவசாய தொழிலாளர்கள் சிறு, குறு விவசாயிகள் இத்திட்டத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்படுகின்றனர். இந்த திட்டங்கள் குறித்த விவரங்களை மாவட்டங்கள் ேதாறும் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்களிடம் விண்ணப்பங்களை பெற்று உரிய முறையில் விண்ணப்பித்து உதவித்தொகை பெற்றுக்கொள்ளலாம். இந்த உழவர் பாதுகாப்பு திட்டத்திற்கு 2019-2020ம் ஆண்டில் மாநிலம் முழுவதும் ₹169.81 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டன.

நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல மாதங்கள் ஆன நிலையில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் எந்த விதமான பயன்பாட்டிற்கும் இல்லாமல் முடங்கி கிடப்பதாக அதிகாரிகள் தரப்பிலிருந்தே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. எனவே இதுதொடர்பாக அரசு சார்பில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி உதவித்தொகை பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்து உதவித்தொகை எளிதில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: