தமிழகம் முழுவதும் 2 ஆண்டுகளாக நூலகங்கள் மேம்படுத்தாமல் முடக்கம் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி

வேலூர், அக்.16: தமிழகம் முழுவதும் 2 ஆண்டுகளாக நூலகங்கள் மேம்படுத்தாமல் முடங்கியுள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 4 ஆயிரத்து 603 பொது நூலகங்கள் இயங்கி வருகின்றன. இதில் ஆயிரத்து 753 நூலகங்கள் சொந்தக் கட்டிடங்களிலும், 2 ஆயிரத்து 516 நூலகங்கள் வாடகையில்லாத கட்டிடங்களிலும் இயங்கி வருகின்றன. 320 நூலகங்கள் வாடகைக் கட்டிடங்களிலும், 14 நடமாடும் நூலகங்களும் இயங்கி வருகின்றன. இந்த நூலகங்களில் தமிழ், இலக்கியம், இலக்கணம், அறிவியல், வரலாறு, கணிதம், பொருளாதாரம், உட்பட அனைத்து அம்சங்கள் உள்ளடக்கிய நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. அதோடு முக்கிய வரலாற்று நூல்களும் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், வாலிபர்கள், பெண்கள், முதியவர்கள் என்று அனைத்து தரப்பினரும் நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நூலகங்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை புதிய தலைப்புகளுடன் கூடிய புத்தகங்கள் வாங்கப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள நூலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதேபோல் ஆண்டுக்கு ஒரு முறை மாநிலம் முழுவதும் பொது நூலகத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நூலகங்களில் பகுதி நேர நூலகங்கள் தரம் உயர்த்தி ஊர்புற நூலகங்களாகவும், ஊர்புற நூலகங்களை தரம் உயர்த்தி கிளை நூலகங்களாகவும் மாற்றப்படும்.

இதற்காக ஆண்டு தோறும் நிதி ஒதுக்கப்பட்டு, நூலங்களுக்கு தேவையான புத்தகங்களும் வழங்கப்படும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள நூலகங்கள் மேம்படுத்தப்படாமல் முடங்கியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் மேம்படுத்தப்படாத, நூலகங்களை படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மேம்பாடுத்தப்படாத நூலகங்களால் மாணவர்கள், ஆசிரியர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். எனவே செல்வத்தில் சிறந்த செல்வமான கல்வி செல்வத்தை கற்க தேவையான நூலகங்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: