துறையூர் நடுவலூரில் கோமாரிநோய் தடுப்பூசி முகாம் துவக்கம் அடுத்த மாதம் 5ம் தேதி வரை முகாம் நடக்கிறது

துறையூர், அக்.15: துறையூர் அருகே உள்ள நடுவலூர் கிராமத்தில் கால்நடைகளுக்கான 17வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நேற்று துவங்கியது.துறையூர் அருகே உள்ள நடுவலூர் கிராமத்தில் தமிழகஅரசின் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் 17வது சுற்று கோமாரி நோய் கட்டுப்படுத்தும் திட்ட முகாம் திருச்சி மாவட்டத்தில் முதலாவதாக நடுவலூர் கிராமத்தில் துவக்கி வைக்கப்பட்டது. இந்த முகாமை திருச்சி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் எஸ்தர்ஷீலா, கால்நடைநோய் புலனாய்வு உதவிஇயக்குனர் சுகுமார் ஆகியோர் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு துவக்கி வைத்தனர். இதுகுறித்து முசிறி கால்நடை பராமரிப்புதுறை உதவி இயக்குனர் சையது முஸ்தபா கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் மட்டும் 3.36 லட்சம் பசுக்கள் மற்றும் எருதுகள் இலக்காக கொண்டு கோமாரி நோய் தாக்குதலால் கால்நடைகளுக்கு பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க 17வது சுற்று தடுப்பூசிமுகாம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகளான கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவது, எருதுகளின் வேலைத்திறன் குறைவது, சினை பிடிப்பது தடைபடுவது, இளம் கன்றுகளின் இறப்பு ஆகியவைகளால் பாதிக்கப்படுகின்றன. மேலும் நோய் அறிகுறிகளாக அதிக காய்ச்சல் உண்டாகுதல், தீவனம் உட்கொள்வதில் மந்தநிலை, பால் உற்பத்தி குறைவு, சினை மாடுகளில் கருச்சிதைவு ஏற்படும் எனவும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். கோமாரிநோய் வராமல் தடுக்க வருடத்திற்கு இரண்டுமுறை தடுப்பூசி அவசியம் போட வேண்டும். தடுப்பூசி போட்டால் பால் குறையும் மற்றும் சினை கலையும் என்று வீண் வதந்தியை நம்பி ஏமாற வேண்டாம் என கால்நடைத்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினர். துவக்க நாளில் 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. இம்முகாமில் கால்நடை மருத்துவர்கள் செந்தில்குமார், வடிவேல், ஆய்வாளர்கள் சுந்தரபாண்டியன், மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.  இந்த தடுப்பூசி முகாம் துறையூர், உப்பிலியபுரம் பகுதிகளில் அக்டோபர் 14முதல் நவம்பர் 5 வரை நடைபெறும் என தெரிவித்தனர்.

Related Stories: