விவசாயிகளுக்கு ஆலோசனை தஞ்சை தற்காலிக பேருந்து நிலையத்தில் சுகாதாரமான குடிநீர், மேற்கூரையை விரைந்து அமைக்க வேண்டும் ஏஐடியூசி ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்

தஞ்சை, அக். 15: தஞ்சை தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர வசதியாக இருக்கை, சுகாதாரமான குடிநீர் மற்றும் மேற்கூரை அமைக்க வேண்டுமென அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தஞ்சையில் கும்பகோணம்- நாகை அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி ஓய்வூதியர் சங்க கூட்டம் நடந்தது. சங்க தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். துணை தலைவர் பீர்தம்பி வரவேற்றார். கவுரவ தலைவர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார். பொது செயலாளர் அப்பாத்துரை வேலை அறிக்கை வாசித்தார். மாநில துணை தலைவர் துரை.மதிவாணன் சம்மேளன முடிவுகள் குறித்து விளக்கினார்.

கூட்டத்தில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி பணிக்காக ஒரு மாதத்துக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டது. மாற்றப்பட்ட தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர வசதியாக இருக்கை, சுகாதாரமான குடிநீர் மற்றும் மேற்கூரை அமைத்து தர வேண்டும். கழிவறை அடிக்கடி சுத்தம் செய்து சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். ஓட்டுநர், நடத்துனர்கள் உடை மாற்றவும், ஓய்வெடுக்கவும் நிரந்தர அறை வசதி செய்ய வேண்டும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும், அது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் அன்றாடம் பப்பாளி, நிலவேம்பு கசாயம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். தஞ்சை ரயிலடி, தலைமை தபால் நிலையம், மூப்பனார் ரோடு, சாந்தபிள்ளைகேட், கான்வெண்ட் முதல் நாஞ்சிக்கோட்டை சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதை சீரமைக்க வேண்டும். 2019 ஏப்ரல் முதல் போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட அனைத்து பணப்பலன்களை தமிழக அரசும், கழக நிர்வாகங்களும் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: