50 ஆண்டுகளுக்கு பிறகு பச்சையப்பா குளத்தில் தண்ணீர் நிரம்பியது

கும்பகோணம், அக். 15: கும்பகோணம் பச்சையப்பா குளத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் நிரம்பியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கும்பகோணம் பச்சையப்பா தெருவில் பச்சையப்பா குளம் உள்ளது. பச்சையப்பா குளம் 4 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இக்குளம் பராமரிப்பின்றி கழிவுநீர் கலப்பதுடன் குப்பைகளை கொட்டி, குளம் இருக்கும் தடமே இல்லாமல் மறைந்து போனது. அதன்பின் 2016ம் ஆண்டு மகாமகத்தின்போது அனைத்து குளங்களையும் தூர்வார வேண்டுமென சமூக ஆர்வலர்கள், இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். அதன்படி கும்பகோணம் பகுதியில் மறைந்துபோன குளங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து பச்சையப்பா குளத்தை தூர்வாரி நடைபாதை, மின் விளக்குகள், இருக்கைகள், விழிப்புணர்வு ஓவியங்கள், படிக்கட்டுகள், இரும்பு தடுப்புகளுடன குளத்தை சுற்றிலும் கான்கிரீட் தடுப்பு சுவர்கள் கட்டுவதற்காக ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் போதுமான அளவில் நிதி வராததால் குளத்தின் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதைதொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் குளத்தை சீரமைக்கும் பணி துவங்கியது. தற்போது 90 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில் குளத்துக்கு தண்ணீர் விட முடிவு செய்தனர்.

ஆனால் குளத்துக்கு தண்ணீர் வரும் பாதை மறைந்து போனதால் அப்பகுதியிலுள்ள சிலரிடம் விசாரித்தனர். அதில் 50 ஆண்டுகளுக்கு முன் காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் வரும் வகையில் போடப்பட்ட குழாய் தூர்ந்து இருக்கும் இடமே இல்லாமல் மறைந்து போனதாகவும், அந்த குழாயை கண்டுபிடித்து சீர் செய்தால் தண்ணீர் விட முடியும் என்று தெரிவித்தனர். இதையடுத்து குழாய் இருக்கும் பாதையை நகராட்சி ஊழியர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து குழாய் இருக்கும் பகுதி சாலையோரமாக கடைகள், தரைகடைகளின் ஆக்கிரமிப்புகளை நகராட்சி அலுவலர்கள் அகற்றி குழாயை சீர் செய்து மின் மோட்டாரை கொண்டு தண்ணீர் விட்டு வருகின்றனர். இதனால் தற்போது பச்சையப்பா குளத்தில் 4 அடி வரை தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குழாய் சீரமைக்கும் பணி 100 சதவீதம் முடிந்தவுடன் காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் வரும் வகையில் விட்டு நிரந்தரமாக தண்ணீர் தேங்கி இருக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது. 50 ஆண்டுகளுக்கு பிறகு தூர்ந்துபோன பச்சையப்பா குளத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பு செயலாளர் சத்தியநாராயணன் கூறுகையில், கும்பகோணத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட குளங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பெரும்பாலான குளங்களில் பணிகள் பாதி நிலையிலேயே இருக்கிறது. இதேபோல் பொற்றாமரை குளம், ரெட்டிராயர் குளம், பாணாதுரை குளம், ஆயிகுளம், அனுமன் குளம், கொட்டையூர் குளம், பைராகிகுளம் உள்ளிட்ட குளங்களில் தண்ணீர் இல்லாமல் உள்ளது.

அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் வரும் பாதை இருந்தும் அப்பகுதியில் ஆக்கிரமிப்பால் மறைந்துள்ளது. மேலும் மணல் திருட்டால் ஆறுகள் பள்ளமானதால் குளத்துக்கு செல்லும் குழாயில் தண்ணீர் செல்லவில்லை. தற்போது மழை பெய்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக குளத்தை தூர்வாரி தண்ணீர் வரும் பாதையை சீரமைக்க வேண்டும் என்றார்.

Related Stories: