வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு தஞ்சையில் மணிமண்டபத்துடன் கூடிய வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்

கும்பகோணம், அக். 15: வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு தஞ்சையில் மணிமண்டபத்துடன் கூடிய வேளாண் கல்லூரி அமைக்க வேண்டுமென தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சட்ட பேரவை செயலாளர் சீனிவாசனுக்கு தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் விமலநாதன் கோரிக்கை மனு அனுப்பினார். அதில் நஞ்சில்லா உணவை உலகத்துக்கு வழங்குதல் உழவனின் தலையாய கடமை என்பதை வாழ்நாள் முழுவதும் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று இயற்கைவழி பாரம்பரிய உழவு தொழில் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்திய இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு அவர் பிறந்த தஞ்சை மாவட்டத்தில் கல்லணை கரை அல்லது தஞ்சை பெரிய கோயில் அருகில் நினைவு மணிமண்டபம் தமிழக அரசு சார்பில் இயற்கைவழி வேளாண் கல்லூரியுடன் அமைக்க வேண்டும்.

இதே கோரிக்கையை கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தஞ்சை கலெக்டர், தமிழக வேளாண் துறை முதன்மை செயலாளர் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் ஆகியோரிடம் பலமுறை நேரில் வலியுறுத்தியும் இதுவரை தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. உடன் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அண்டை மாநில இயற்கைவழி விவசாயம் செய்யும் விவசாயிகள், அங்கு அவரது சிலைகளை அமைக்க ஆர்வமாக இருக்கிறார்கள். அவ்வாறு அங்கு அமைத்தால் தமிழகத்துக்கு தான் இழுக்கு அவமானமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: