அரசு கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல் விற்பனை செய்வதற்கு புதிய நிபந்தனைகளை கைவிட வேண்டும் வாணிபக்கழக பணியாளர் சங்கம் வலியுறுத்தல்

தஞ்சை, அக். 15: அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்வதற்கு விவசாயிகள் பட்டா சிட்டா தாக்கல் செய்ய வேண்டும் உள்ளிட்ட புதிய நிபந்தனைகளை கைவிட வேண்டுமென நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர் சங்கம் வலியுறுத்தியது. தஞ்சையில் ஏஐடியூசி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர் சங்கம் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர் சங்க கூட்டு நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது. சாமிக்கண்ணு, சந்தானம் தலைமை வகித்தனர். மாநில பொது செயலாளர்கள் சந்திரகுமார், புண்ணீஸ்வரன் ஆகியோர் தொழிலாளர்களின் தற்போதைய பிரச்னைகளை விளக்கி பேசினர். கூட்டத்தில் அரசு நெல் கொள்முதலில் நெல் விற்பனை செய்ய வரும் விவசாயிகளிடம் பட்டா சிட்டா, சாகுபடி பரப்பளவு, மகசூல், நெல் விற்பனை செய்யவுள்ள நெல் விபரங்கள் தர வேண்டுமென புதிய நிபந்தனை விதிக்கப்படுகிறது. இது விவசாயிகளுக்கு தேவையற்ற கஷ்டத்தை உண்டாக்குகிறது. எனவே இந்த புதிய நிபந்தனைகளை கைவிட்டு கடந்தாண்டு கடைபிடித்த முறைப்படி ஆதார் மற்றும் வங்கி கணக்கை பெற்று கொண்டு நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் பலருக்கு வங்கி கணக்கில் ஏறாத நிலையில் நாள்தோறும் சொற்பமாக கிடைக்கிற கூலியையும் வங்கி மூலம் பட்டுவாடா செய்ய முடிவெடுத்திருப்பது பொருத்தமற்றது. கூலியை நேரடியாக வழங்க வேண்டும்.

நெல் கொள்முதலின் நோக்கத்துக்கு எதிரான விவசாயிகளை பாதிக்கிற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவும் விவசாயிகளிடம் பணம் பெற்று உயர் அதிகாரிகளுக்கு பங்கிடுவது லாரி மாமூல் என்ற பெயரில் விவசாயிகளின் பணத்தை பயன்படுத்துவது ஆயிரக்கணக்கான ரூபாய் இழப்பு என காரணம் காட்டி கட்டாய வசூல் செய்வது உள்ளிட்ட ஊழல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த ஆக்கபூர்வ ஆலோசனைகளுடன் தஞ்சை, நாகை, திருவாரூர் முதுநிலை மண்டல மேலாளர்களையும் சென்னையில் மேலாண்மை இயக்குனரையும் சங்கம் சார்பில் சந்தித்து முறையிட முடிவெடுக்கப்பட்டது.

மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஜனவரி 8ம் தேதி நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்று வெற்றி பெற செய்வது.

நெல் கொள்முதல் பணியாளர்களுக்கு 1.4.2015 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு 5.3.19 முதல் அமல்படுத்த வேண்டிய புதிய சம்பள உயர்வை அமல்படுத்த வைண்டும். சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும். காலதாமதமின்றி தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில இணை பொது செயலாளர் குணசேகரன், பொருளாளர் கோவிந்தராஜன், துணைத்தலைவர் கோதண்டபாணி, மாநில செயலாளர்கள் சுப்பிரமணியன், கிருஷ்ணன், முருகேசன், கலியபெருமாள், மாவட்ட செயலாளர்கள் தஞ்சை ராஜேந்திரன், திருவாரூர் ராஜசேகர், நாகை ஆனந்தன், கடலூர் சண்முகம், தியாகராஜன், முத்துக்குமரன் பங்கேற்றனர்.

Related Stories: