இன்னம்பூரில் தரமில்லாமல் ஷட்டர் அமைத்ததால் பொதுமக்கள் சாலை மறியல்

கும்பகோணம், அக். 15: இன்னம்பூரில் தரமில்லாமல் ஷட்டர் அமைத்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். கும்பகோணம் அடுத்த இன்னம்பூர் கிராமத்தில் பழவாற்றில் கோணமதுபாலம் உள்ளது. பழவாறு காவிரியில் இருந்து பிரிந்து இன்னம்பூர் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பாசனத்துக்கு பயன்பெறுகிறது. இக்கோணமதுபாலத்தில் உள்ள ஷட்டர்கள் உடைந்ததால் இன்னம்பூர் கிராமத்தில் 3 குளங்கள், வாய்க்கால்களில் தண்ணீர் செல்லாமல் 1,000 ஏக்கர் சாகுபடி நிலங்கள் கேள்விக்குறியானது. இதுகுறித்து பொதுப்பணித்துறையிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். இதற்கு நடவடிக்கை எடுக்காததால் ஷட்டரை சீரமைக்காவிட்டால் பொதுப்பணித்துறை அலுவலகத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்துவோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனால் நேற்று முன்தினம் அவசர கதியாக ஷட்டர்களை அதிகாரிகள் பிரித்தெடுத்தனர். பின்னர் அதை சீரமைத்து ஷட்டர்களை வைத்து அந்த பகுதியில் பாலத்தோடு இணைக்கும் வகையில் சிமென்ட் கற்களை வைத்து கட்டினர். ஆனால் சிமென்டில் தரமில்லாமல் மணல் அதிகமாக இருப்பதால் ஷட்டரின் உறுதி தன்மை இல்லாமல் போய் விடுமென தொழிலாளர்களிடம் பொதுமக்கள் கேட்டனர். அதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியவாறு நாங்கள் கட்டுகிறோம் என்று தொழிலாளர்ள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்து தரமற்ற பணியை கண்டித்து கட்டிடம் கட்டுபவர்களுக்கு சொந்தமான லாரியை சாலையில் மறித்து நிறுத்தி பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். சுவாமிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுப்பணித்துறை மேலதிகாரிகள் ஷட்டர் கட்டுமானத்தின் தரத்தை ஆய்வு செய்து உறுதி தன்மையை அறிவிக்க வேண்டும், தவறும்பட்சத்தில் கட்டிடத்தை மேற்கொண்டு கட்டுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று பொதுமக்கள் கூறினர். நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக போலீசார் கூறினர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories: