பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை விவசாயிகள் வாங்கிய கடனில் வரவு வைக்கக்கூடாது

தஞ்சை, அக். 15: பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையை கடனில் வரவு வைக்கக்கூடாது என்று தஞ்சையில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. டிஆர்ஓ சக்திவேல் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கக்கரை சுகுமாரன் உள்ளிட்ட விவசாயிகள் அளித்த மனுவில், ஒரத்தநாடு வட்டத்தில் 52 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் உள்ளன. இதில் 16 வங்கிகளுக்கு காப்பீட்டுத்தொகை கிடைக்கவில்லை. மீதமுள்ள வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகையை வழங்காமல் அவர்களது வராக்கடனில் வரவு வைக்கப்படுகிறது. இது ஏற்கனவே கடும் பாதிப்பில் உள்ள விவசாயிகளுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. எனவே பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையை விவசாயிகளின் கடனில் வரவு வைக்கக்கூடாது. அவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பட்டியலின மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: தமிழக மக்கள் முன்னேற்ற கழக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் விவேகானந்தன் அளித்த மனுவில், பேராவூரணி வட்டம் ஊமத்தநாடு ஊராட்சி ஆலடிக்காடு கிராமத்தில் பட்டியலின மக்கள் குடியிருப்பு பகுதியில் ஆதிக்க சாதியினர் சுடுகாடு கட்ட முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தகோரி கடந்த 9ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவிருந்தது. இதற்கு அனுமதி கோரி சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் மனு அளித்தோம். ஆனால் காவல்துறையினர் அனுமதி மறுத்ததுடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி இருந்தோம்.

ஆனால் காவல்துறையும், வருவாய் நிர்வாகமும் ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக செயல்பட்டதால் மக்கள் யாரும் பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை. எனவே கலெக்டர் இப்பிரச்னையை கருத்தில் கொண்டு உடனடியாக சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியலின மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 70 சதவீதத்துக்கு மேல் மகசூல் இழப்பு: ஒக்கநாடு கீழையூர் விவசாயி ராமச்சந்திரன் உள்ளிட்ட விவசாயிகள் அளித்த மனுவில், கடந்தாண்டு விவசாயிகள் நெற்பயிருக்கு காப்பீடு செய்தோம். ஆனால் கஜா புயல் காரணமாக சாகுபடி கடுமையாக பாதித்து மகசூல் இழப்பு ஏற்பட்டது. இதற்கு காப்பீட்டு நிறுவனங்கள் 5 சதவீதம் தான் பாதிப்பு என குறிப்பிட்டு அதற்குண்டான இழப்பீட்டு தொகையை வழங்கியுள்ளனர். ஆனால் 70 சதவீதத்துக்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பாதிப்புக்குண்டான சதவீதத்தை அதிகப்படுத்தி அதற்கேற்ப இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

வீடு கட்டும் திட்டத்தை கைவிடுங்கள்: கரம்பையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், கரம்பையத்தில் 25 ஏக்கரில் 70 ஆண்டுகளாக விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது அந்த இடத்தில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் மூலம் வீடுகள் கட்டி கொடுப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதால் இங்கு வீடு கட்டும் திட்டத்தை கைவிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. வீட்டுமனை பட்டா வேண்டும்: தாராசுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், தாராசுரத்தில் பல ஆண்டுகளாக கோயில் நிலங்களில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு குடியிருக்க வீட்டுமனை வழங்க வேண்டும் என 70க்கும் மேற்பட்ட பெண்கள் தனித்தனியாக மனு அளித்தனர். முதியோர் உதவித்தொகை: தஞ்சை முனியாண்டவர் காலனியை சேர்ந்தவர் சின்னையன் மனைவி சரோஜா (78). இவருக்கு ஒரு மகள், இரு மகன்கள் உள்ளனர். இதில் மகன்கள் யாரும் தனக்கு ஆதரவளிக்கவில்லை என்பதால் முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டுமென மனு அளித்தார்.

Related Stories: