×

கால்நடைகள் குடிப்பதற்கு கூட தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் விசுவக்குடி அணைக்கட்டு பாசன வாய்க்காலை கட்டி முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

பெரம்பலூர், அக். 15: கால்நடைகள் குடிக்கக்கூட தண்ணீரின்றி விசுவக்குடி அணைக்கட்டு வறண்டு கிடக்கிறது. எனவே திட்டமிட்டபடி பாசன வாய்க்காலை கட்டி முடிக்க வேண்டுமென சுற்றுவட்டார விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 2015ம் ஆண்டு வேப்பந்தட்டை தாலுகா அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட விசுவக்குடி அருகே பச்சைமலை, செம்மலை ஆகிய இருமலை குன்றுகளை இணைத்து விசுவக்குடி அணைக்கட்டு ரூ.33.67 கோடி மதிப்பில் புதிய அணைக்கட்டு பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பின் சார்பில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் கட்டி முடிக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த அணைக்கட்டில் 4 ஆண்டுகள் கடந்த பிறகும் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடக்கூடிய வரத்து வாய்க்கால்கள் இதுவரை கட்டி முடிக்கவில்லை. 4 ஆயிரம் மீட்டர் நீளத்திற்கு அணையின் இருபுறம் இருந்து பாசனத்துக்காக வரத்து வாய்க்கால்கள் கட்டப்படும் என தெரிவித்த நிலையில் 4 ஆண்டுகளில் இதுவரை பாசன வாய்க்கால் பணிகள் 50 சதவீதம் கூட நிறைவடையவில்லை.

குறிப்பாக 2015ம் ஆண்டிலும், 2017ம் ஆண்டிலும் அணையின் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவை எட்டியபோதும் அணைக்கட்டை சார்ந்துள்ள தொண்டமாந்துறை, விசுவக்குடி, அன்னமங்கலம், அரசலூர், ஈச்சங்காடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளின் நலனுக்காக இதுவரை ஒருசொட்டு தண்ணீர் கூட திறந்து விடவில்லை. காரணம் பாசன வாய்க்கால் பணிகள் பாதியிலேயே நிற்பது தான். 2017ம் ஆண்டு வெங்கலம் விவசாயிகள் விடுத்த வேண்டுகோளின்படி வெங்கலம் ஏரிக்கு மட்டும் எம்எல்ஏ தமிழ்ச்செல்வனால் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணைக்கட்டு கட்டி முடித்ததன் நோக்கம் அப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன பரப்பு பயனடையும் என்ற கணக்கில் தான். மேலும் சுற்றுவட்டார கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் ஆதாரம் பெருகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அணைக்கட்டில் நீர் நிரம்பி இருந்தாலும் சுற்றுவட்டார கிணறுகளில் ஒரு அடி உயரம் கூட தண்ணீர் இதுவரை உயர்ந்தபாடில்லை. கனமழைக்கு உற்பத்தியாகி கரைபுரண்டு ஓடும் காட்டாறு எனப்படும் கல்லாறு தண்ணீர் முழுவதும் ஒரு இரவு, ஒருபகல் முழுவதும் ஆர்ப்பரித்து கடந்து சென்று கடலூர் மாவட்டம் வழியாக கடலுக்கு சென்று வீணாவதை தடுக்க தான் இந்த அணைக்கட்டு கட்டப்பட்டது.

ஆனால் இந்த அணைக்கட்டு தற்போது மீன் வளர்ப்பதற்கு கூட ஏதுவான நிலையில் இல்லை. அணைக்கட்டில் இதுவரை இருமுறை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டும் 2 மாதங்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் பூமியாலும், வானத்தாலும் உறிஞ்சப்பட்டு வறண்டு விட்டது. கடந்த 3 மாதங்களில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து பெரம்பலூர் மாவட்டத்தில் கீழப்பெரம்பலூர், வடக்கலூர் ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி வழிந்தும் 8 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேல் நிரம்பியும், 15 ஏரிகள் 50 சதவீதத்திற்கு மேல் நிரம்பியும், விசுவக்குடி அணைக்கட்டு மட்டும் கால்நடைகள் தண்ணீர் குடிக்கக்கூட ஏதுவான நிலையில் இல்லை என்பதால் விவசாயிகள் மத்தியில் விரக்தி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தும் அணைக்கட்டை ஆழப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ளவோ, பச்சைமலை, செம்மலைகளை இணைக்கும் பகுதியில் உள்ள மலை உச்சியிலிருந்து மொத்த மழைநீரும் அணைக்கு வந்துசேர வேண்டிய வரத்து வாய்க்காலை சீரமைக்கவோ திட் டமிடாமல் பொழுதுபோக்கு வசதிக்காக சுற்றுலாத்தலமாக்கி விடுவோம் என்கிற பெயரில் கோடிக்கணக்கான பணத்தை கொட்டி செலவு செய்தும், தண்ணீர் வசதி இல்லாத நிலையில் திண்டாடும் அவல நிலையில் தான் அணைக்கட்டு உள்ளது.

வருங்காலத்தில் நல்ல மழை பெய்து அணைகள் நிரம்பி வழியும் போதாவது, அதில் தேங்கியுள்ள தண்ணீரை பாசனத்துக்காக பயன்படுத்தும் நோக்கத்தில் வரத்து வாய்க்காலை முழுமையாக அமைத்துத்தர பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பு அக்கறை காட்ட வேண்டும். அதை விடுத்து விவசாயத்துக்காக ஒதுக்கப்படும் நிதியை விரயமாக்கும் நோக்கில் பொதுப்பணித்துறை தொடர்ந்து செயல்பட்டால் மீன் வளர்க்க மட்டுமன்றி சாதாரண செடிகளுக்கு கூட தண்ணீரில்லாத சூழலில் தான் அணைக்கட்டு இருக்கும். எனவே விசுவக்குடி அணைக்கட்டுக்கான பாசன வாய்க்காலை அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக செலவு செய்து செய்து முடிக்க வேண்டுமென பொதுப்பணித்துறை, மாவ ட்ட நிர்வாகத்தை சுற்றுவட்டார விவசாயிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

Tags : irrigation canal ,
× RELATED கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்