×

உத்தமபாளையத்தில் நிதிப்பற்றாக்குறையால் தள்ளாடும் ஊராட்சிகள்

தேவாரம், அக்.15: உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் நிதிப்பற்றாக்குறையால் கிராம ஊராட்சிகள் சம்பளம் போட முடியாமல் திண்டாடி வருகின்றன. தேனி மாவட்டத்தில் 130 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் ஒவ்வொரு வருடமும் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மக்கள்தொகை அடிப்படையில் ஒதுக்கப்படும் நிதி (எஸ்எப்சி), கிராமங்களின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகின்றன. அதேநேரத்தில் மக்கள்தொகை குறைவாக உள்ள கிராம ஊராட்சிகள் வளர்ச்சியில் பின்னுக்கு செல்கின்றன. இதற்கு காரணம், சிறிய ஊராட்சிகளில் ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவாக வரக்கூடிய நிதியும் உண்டு. இதில் சம்பளம், துப்புரவு பணி, ஓஹெச்டி ஆபரேட்டர் சம்பளம் என வழங்குவதில் பல பிரச்னைகள் எழுகின்றன. இதேபோல் ஒப்படைக்கப்பட்ட நிதி, ஸ்டாம்ப் டூட்டி என நிதி வரும்போது திண்டாட்டங்கள் குறைகின்றன. ஆனால், அதே நேரத்தில் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் டி.சிந்தலைசேரி, டி.மீனாட்சிபுரம், தம்மிநாயக்கன்பட்டி, டி.ரெங்கநாதபுரம், கோகிலாபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் போதிய நிதி இல்லாமல் திண்டாடும் நிலை உள்ளது.

மாதந்தோறும் வரவேண்டிய நிதி வராத நிலையிலும் (எஸ்எப்சி) மற்றும் ஏற்கனவே நிதி இல்லாத நிலையிலும் அவசரத்திற்கு கூட வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. பெரிய ஊராட்சிகளில் குடிநீர், தொழில்வரி, வீட்டு வரி போன்றவைகளை வைத்து சமாளிக்கும் நிலை உள்ளது. இந்த நிதியிலும் கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் கட்டிட பணிகள், காண்ட்ராக்ட் வேலைகள், மின்விளக்கு, சாக்கடை பணிகளுக்கு நிதி ஒதுக்கும்போது கிராமங்களில் சம்பளம் போடக்கூட முடியாத நிலை உருவாகிறது. இதனால் நிதி பற்றாக்குறை உள்ள பஞ்சாயத்துக்கள் திணறுகின்றன. எனவே, இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் போதிய நிதி ஒதுக்கீடு செய்து இதன் வளர்ச்சிக்கு உதவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பொதுமக்கள் கூறுகையில், `` அன்றாட அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராம ஊராட்சிகள் உள்ளன. இதனைக் கணக்கில் எடுத்து அதிகமாக நிதி பெறவும், மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதி இல்லாத ஊராட்சிகளுக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்ய முன் வர வேண்டும்’’ என்றனர்.

Tags : Panchayats ,Uttamapalai ,
× RELATED மதுரை மக்களின் பொழுதுபோக்கிற்காக ரூ.50...