×

கம்பம் மக்கள் எதிர்பார்ப்பு கம்பத்திலிருந்து மூணாறுக்கு அரசு பஸ் இயக்க வேண்டும்

கம்பம், அக்.15: கம்பத்திலிருந்து கேரளாவின் முக்கிய சுற்றுலா தலமான மூணாறுக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக அளவில் தேனி மாவட்டம் சுற்றுலாவில் சிறந்து விளங்குகிறது. வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், குச்சனூர் சனீஸ்வரன் கோயில், கும்பக்கரை அருவி, சுருளி நீர்வீழ்ச்சி, சின்ன சுருளி, மேகமலை, குரங்கணி, கொழுக்குமலை மற்றும் வைகை அணை என தேனி மாவட்டம் முழுவதும் பல சுற்றுலா தலங்கள் உள்ளன.
அதேபோல தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள கம்பம், போடி ஆகிய ஊர்களில் வழியாக 80 கி.மீ தொலைவில் தேசிய அளவில் சுற்றுலா தலமாக விளங்கும் மூணாறு உள்ளது. தற்சமயம் மூணாறு செல்ல வேண்டுமென்றால் தேனி சென்று அங்கிருந்து போடி மெட்டு வழியாக மட்டுமே செல்ல முடிகிறது. கம்பத்தை ஒட்டியுள்ள சுருளிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மூணாறு செல்ல திரும்பி தேனி சென்று அங்கிருந்து மூணாறு செல்ல வேண்டிய சூழல் உள்ளது இதனால் பெரும்பாலும் தேனி மாவட்டத்துக்கு வருகை தரும் சுற்றுலா  பயணிகள் சுருளி அருவியை பார்க்கமலே தேனியிலிருந்து மூணாறுக்கு செல்கின்றனர். இதனால் கம்பம் பகுதியில் சுற்றுலா வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

தினமும் அதிகாலை 4 மணிக்கு  தனியார் பஸ் மட்டுமே மூணாறுக்கு கம்பத்திலிருந்து தேனி, போடி வழியாக இயக்கபடுகிறது. அரசு சார்பில் கம்பமெட்டு, நெடுங்கண்டம், உடும்பஞ்சோலை வழியாக தினத்தோறும் தமிழக அரசு சார்பில் மூணாறுக்கு பஸ் இயக்கினால் கம்பத்திலுள்ள வணிகம் மேலேங்கும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதுபற்றி வீரமணி கூறுகையில், `` கம்பத்தை ஒட்டியுள்ள சுருளி அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மூணாறு செல்ல மிக சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதனால் கம்பத்திலிருந்து கம்பமெட்டு, நெடுங்கண்டம் வழியாக மூணாறுக்கு அரசு பஸ் இயக்க வேண்டும். இதனால் வர்த்தக அளவில் கம்பத்தில் நிறைய வளர்ச்சியில் ஏற்படும். கம்பத்தில் நிறைய ரெடிமேட் கார்மெண்ட்ஸ்கள் உள்ளன. நேரடியாக மூணாறுக்கு கம்பத்திலிருந்து அரசு பஸ் இயக்கினால் வர்த்தகமும் சிறக்கும். மேலும் சுற்றுலாப் பயணிகளால் கம்பத்தின் பொருளாதார வளர்ச்சி மேம்படும். தேனியிலிருந்து மட்டுமே மூணாறுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கம்பத்தில் இருந்து அதிகாலை ஒரே ஒரு தனியார் பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. எனவே, பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மூணாறுக்கு பஸ் இயக்கும் கோரிக்கையை உடனே அரசு செயல்படுத்த வேண்டும்’’ என்றார்.


Tags : Munnar ,
× RELATED தொழிலாளர் குடியிருப்புகளை சீரமைக்க...