×

இளையான்குடியில் மக்களை மிரட்டும் தெருநாய்கள்

இளையான்குடி, அக்.15:  இளையான்குடியில் பெருகி வரும் வெறிநாய்களால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இளையான்குடி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இந்த வார்டு பகுதிகளில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் மற்றும் கோழி கழிவுகளை உண்பதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நாய்கள் இங்குதான் வருகின்றன. சாலையோரம், மற்றும் தெருக்களில் கொட்டப்படும் கழிவுகளை உண்பதற்கு நாய்களுக்கிடையே கடும் சண்டை நிலவுகிறது. அதனால் வெறிப்பிடித்த நாய்கள் சாலையில் செல்லும், சிறுவர்கள் முதல் பெண்கள், முதியோர் வரை அனைத்து தரப்பினரையும் கடித்து வருகிறது. கண்மாய்கரை பகுதி, தாலுகா ஆபிஸ், போலீஸ் ஸ்டேசன், கீழாயூர், கீழாயூர் காலனி ஆகிய பகுதிகளில் நாய்கள் அதிகளவில் சாலையில் சுற்றி வருகிறது. இந்த பகுதியில் பள்ளி மற்றும் அலுவலகங்கள் உள்ளதால் மாணவிகள் மற்றும் ஊழியர்கள் ஒருவித அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. மேலும் சைக்கிள், டூவீலரில் செல்வோரை மிரட்டியும் வருகிறது. அதனால் இளையான்குடியில் உள்ள வெறிநாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...